‘ஐஎஸ்’ குழுவுடன் தொடர்புடைய ஆஸ்திரேலியப் பெண்கள் தாயகம் திரும்பினர்

‘ஐஎஸ்’ குழுவுடன் தொடர்புடைய ஆஸ்திரேலியப் பெண்கள் தாயகம் திரும்பினர்

1 mins read
970fed88-3dc5-47e7-adc2-55363058c16c
‘ஐஎஸ்’ போராளிகளுடன் தொடர்பு இருப்பதாக நம்பப்படும் ஆஸ்திரேலியக் குடும்பங்களின் உறுப்பினர்கள் இவ்வாண்டு ஏப்ரல் 26ஆம் தேதி சிரியாவின் ‘டெரிக்’ பகுதிக்கு அருகில் உள்ள ‘அல்-ரோஜ்’ முகாமைவிட்டு வெளியேறக் காத்திருந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ‘ஐஎஸ்’ போராளிகளுடன் தொடர்புடைய 13 பெண்களும் குழந்தைகளும் ஆஸ்திரேலியா சென்றுசேர்ந்துள்ளனர். அவர்கள் கடந்த சில ஆண்டுகளாகச் சிரியாவின் தடுப்புக்காவல் முகாம் ஒன்றில் தங்கியிருந்தனர்.

அவர்கள் ‘அல் ரோஜ்’ தடுப்புக்காவல் முகாமில் 2019ஆம் ஆண்டிலிருந்து வசித்துவந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததாக நம்பப்படும் பெண்கள் மூவரும் எட்டுக் குழந்தைகளும் வியாழக்கிழமை (மே 7) பிற்பகலில் மெல்பர்னைச் சென்றடைந்தனர்.

மற்றொரு பெண்ணும் அவரது குழந்தையும் சிறிது நேரம் கழித்துச் சிட்னியில் தரையிறங்கினர்.

அந்தப் பெண்களில் சிலர்மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று காவல்துறையினர் கூறினர்.

தடைசெய்யப்பட்ட பகுதிக்குப் பயணம் மேற்கொள்வது, அடிமை வர்த்தகத்தில் ஈடுபடுவது போன்றவை அவற்றில் அடங்கும்.

கடந்த 2010ஆம் ஆண்டுவாக்கில், நூற்றுக்கணக்கான ஆஸ்திரேலியப் பெண்கள் ‘ஐஎஸ்’ குழு உறுப்பினர்களாய்ச் சேர்ந்துகொள்ள மத்திய கிழக்கிற்குச் சென்றனர்.

அவர்களில் பலர் போராளிகளாகச் சேர்ந்துகொண்ட தங்கள் கணவர்களுடன் அங்குப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

‘ஐஎஸ்’ குழு வீழ்ந்த பிறகு, அங்குச் சிக்கித் தவிக்கும் தங்கள் குடிமக்களைக் கையாள்வதன் தொடர்பில் ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இன்னும் சிரமப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்