சிட்னி: அமெரிக்க சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளையர் ஒருவர் மீது செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) அன்று காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது.
பெரிய புரளி அழைப்புகளுடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட இணையக் குற்றப் பின்னணியைச் சேர்ந்த உறுப்பினர் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு உளவுத்துறை தகவல் வழங்கியதைத் தொடர்ந்து, விசாரணை தொடங்கியதாக ஆஸ்திரேலிய மத்திய காவல்துறை கூறியது.
டிசம்பர் 2025ல் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிறுவனின் வீட்டில் காவல்துறையினர் ஒரு சோதனை ஆணையை நிறைவேற்றினர். அப்போது அங்கிருந்த ஏராளமான மின்னணுச் சாதனங்களையும் தடைசெய்யப்பட்ட துப்பாக்கியையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
அமெரிக்க சில்லறை வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதாக அவசர கால சேவைகளுக்குப் பலமுறை பொய்ப் புகார்களை அளித்ததாக அந்தச் சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இளையர் மீது 12 தொலைத்தொடர்புக் குற்றங்களைக் காவல்துறை சுமத்தியது.
தடைசெய்யப்பட்ட துப்பாக்கியை அனுமதியின்றி வைத்திருந்ததாகவும் சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
“இந்த விசாரணையில், வட்டார நியூ சவுத் வேல்சைச் சேர்ந்த ஓர் இளையர் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள், வணிகங்கள் மற்றும் சேவைகளுக்குப் பரவலான அச்சத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாக குறிப்பிடத்தக்க நிதித் தாக்கங்கள் ஏற்பட்டன,” என்று ஆஸ்திரேலிய மத்திய காவல்துறையின் துணை ஆணையர் கிரேம் மார்ஷல் கூறினார்.
இதுபோன்ற குற்றங்களைப் பெரும்பாலும் 11 முதல் 25 வயதுடைய இளம் ஆண்கள் தங்கள் இணையக் குழுக்களில் அந்தஸ்து, புகழ் மற்றும் அங்கீகாரத்தைப் பெறுவதற்காகச் செய்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
போலி அழைப்புகள் என்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் முக்கியமான அவசரகால வளங்களை வீணடிக்கும் ஓர் ஆபத்தான, சீர்குலைக்கும் குற்றமாகும் என்று மத்திய புலனாய்வுப் பிரிவின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் ஜேசன் கப்லான் கூறினார்.

