ஆஸ்திரேலியாவில் முதல் கரிம சுத்திகரிப்பு ஆலை

ஆஸ்திரேலியாவில் முதல் கரிம சுத்திகரிப்பு ஆலை

2 mins read
33408b2e-1a6c-470a-8139-680fa3d0b92b
ஆஸ்திரேலியாவின் நியூகாசல் நகரில் அமைந்துள்ள கரிம சுத்திகரிப்பு ஆலையில் அந்நாட்டின் எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் கிறிஸ் போவன் (இடது) மற்றும் எம்சிஐ கார்பன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்கஸ் டாவே. - படம்: ராய்ட்டர்ஸ்

நியூகாசல்: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அந்நாட்டின் முதலாவது கரிம சுத்திகரிப்பு ஆலை அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது. பிரபல வெடிபொருள் தயாரிப்பு நிறுவனமான ‘ஓரிகா’வின் அம்மோனியா உற்பத்திப் பிரிவிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவை இந்த ஆலை நேரடியாக உள்வாகிக்ககொள்கிறது.

அவ்வாறு சேகரிக்கப்படும் கரிமத்தைப் பயன்படுத்தி கான்கிரீட், காகிதம், கண்ணாடி போன்றவை தயாரிக்கப்படுகின்றன. ‘எம்சிஐ கார்பன்’ நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, இந்த மிர்ட்டிள் கார்பன் பிடிப்பு, பயன்பாட்டுத் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

சுற்றுச்சூழலில் உள்ள கரியமில வாயுவை பாறைகள் உள்வாங்கி அவற்றில் கரிமத்தைச் சேமித்து வைக்க இயற்கை கையாளும் முறையைப் போலவே புதிய ஆலை கடைப்பிடிக்கிறது.

இந்த ஆலை, ஆண்டுக்கு 2,500 டன் கரியமில வாயுவைச் சுத்திகரிக்கும் ஆற்றலைக் கொண்டது. நிலத்தடிப் பாறைகளில் கரிமத்தைச் சேமிக்கும் பழைய முறைகளுக்கு மாற்றாக, கரிமத்தைக் கொண்டு லாபகரமான புதிய பொருள்களை உருவாக்கும் இத்தொழில்நுட்பம், தொழிற்சாலைகள் அவற்றின் கரிம வெளியேற்றத்தை மிக எளிதாகக் குறைக்க உதவும் என்று ஆஸ்திரேலியாவின் எரிசக்தி மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ 400 மில்லியன் டன் கரிமம் வெளியேறும் நிலையில், 2035ஆம் ஆண்டுக்குள் ஒட்டுமொத்த கரிம வெளியேற்றத்தை 62 முதல் 70 விழுக்காடு வரை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக, ஆஸ்திரியாவில் ஆண்டுக்கு 50,000 டன் கரிமத்தை உள்வாங்கக்கூடிய பிரம்மாண்ட தொழிற்சாலை அளவிலான ஆலையை அமைக்கவும் எம்சிஐ நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்