தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மே 3 தேர்தலில் வெற்றிபெற ஆஸ்திரேலிய ஆளும் கட்சி போராடும் என கணிப்பு

1 mins read
fa156f6f-3a11-4a8e-8008-df0f96ea0e1f
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 3ஆம் தேதி நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் தொழிற்கட்சி குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளும் என்று கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘நியூஸ்போல்’ என்னும் அந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகள் திங்கட்கிழமை (ஏப்ரல் 14) வெளியிடப்பட்டன. ‘த ஆஸ்திரேலியன்’ செய்தித்தாளுக்காக அந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

கடந்த பிப்ரவரியில் இருந்த நிலைமை தற்போது தலைகீழாக மாறி இருக்கிறது. தொழிற்கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றப் போவதாகப் பெரும்பான்மையான வாக்காளர்கள் அப்போது கூறி இருந்தனர்.

தற்போதைய நிலவரப்படி, பிரதமர் ஆண்டனி அல்பனிஸின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகவும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. தற்போதைய அணியை அவரே மீண்டும் வழிநடத்தலாம் என்பது வாக்காளர்களின் கருத்தாக உள்ளது.

அதேநேரம், எதிர்த்தரப்பு சுதந்திர-தேசிய கட்சிக்கான மக்களின் ஆதரவு 2022 தேர்தலில் இருந்ததைக் காட்டிலும் வெகுவாகக் குறைந்துவிட்டதாகக் கருத்துக்கணிப்பு கூறுகிறது.

அதற்கிணங்க, எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டனின் செல்வாக்கும் சரிந்துவிட்டதை அது சுட்டிக்காட்டியது.

ஆளும் கட்சி போராடி வெற்றிபெறும் என்று ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். யாருக்கும் வெற்றி கிடைக்காமல் தொங்கு நாடாளுமன்றம் ஏற்படலாம் என்பது மற்றொரு சாராரின் கருத்து. அப்படிப்பட்ட நிலையில் ஆளும் கட்சி சிறுபான்மை அரசாங்கத்தை அமைக்கலாம் என்பது பொதுவான கருத்தாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்