முவான்: தென்கொரிய வரலாற்றில் இதுவரை இல்லாத மிக மோசமான விமான விபத்தில் ஜேஜு விமானத்தின் வால் பகுதியை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
வால் பகுதியை அகற்றுவதால் விபத்துக்கான தடயங்கள் கிடைக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேஜு விமானம் ஓடுதளத்தில் தரையிறங்கி பின் தடுப்புச் சுவர் மீது மோதி வெடித்தது. இதில் 179 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விமானத்தில் சிப்பந்திகள், பயணிகள் உட்பட மொத்தம் 181 பேர் பயணம் செய்தனர். இவர்களில் இரு சிப்பந்திகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தாய்லாந்திலிருந்து புறப்பட்ட விமானம் தென்கொரியாவில் தரையிறங்கியபோது விபத்தில் சிக்கியது.
இதுவரை விபத்துக்கான காரணம் கண்டறியப்படவில்லை. ஆனால் பறவைக் கூட்டம் மோதியிருக்கலாம் அல்லது கியர் பழுதடைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் ஊகித்து வருகின்றனர்.
“பளூதூக்கியைக் கொண்டு வால் பகுதியை தூக்க திட்டமிட்டுள்ளோம்,” என்று தென் ஜியோல்லா மாவட்டத்தின் தலைமை விசாரணையாளர் நா வன் ஹோ தெரிவித்தார்.
“இந்த வால் பகுதியில் சில தடயங்கள் இருக்கலாம். ஆனால் முடிவு தெரிய இன்னும் ஒரு நாளாகும்,” என்றார் அவர்.
இதற்கிடையே காவல்துறையினர் விபத்துக்கான காரணத்தை நிர்ணயிக்க முயற்சி செய்து வருகின்றனர். அதிகாரிகளும் ராணுவ வீரர்களும் விபத்து நிகழ்ந்த இடத்தை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
ஆனால் விபத்துக்கான காரணத்தை துல்லியமாகக் கண்டறிய ஆறு முதல் மூன்று ஆண்டுகள் ஆகலாம் என்று தென்கொரிய போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
வெள்ளிக்கிழமை அன்று ஆதாரங்களைக் கண்டுபிடிப்பதற்காக ஜேஜு அலுவலகத்தையும் முவான் விமான நிலையத்தையும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
போயிங் 737-800 ரக விமானங்கள் அனைத்தையும் சோதனையிடவும் தென்கொரிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக தரையிறங்க உதவும் விமானத்தின் கியர் சோதனையிடப்பட்டு வருகிறது.