லாஸ் ஏஞ்சலிஸ்: ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனமும் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட அண்மைய விண்வெளிப் பயணத் திட்டத்தின்கீழ் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்குச் சென்றிருந்த விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்பிவிட்டனர்
சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை (ஜூலை 14) இரவு 7.15 மணிக்கு அவர்களது பூமிப் பயணம் தொடங்கியது.
அனைத்துலக விண்வெளி நிலையம், இந்தியாவின் கிழக்குக் கரைக்குமேல் சுற்றிவந்துகொண்டிருந்தபோது, ‘டிராகன்’ விண்கலம் அந்த நால்வரையும் சுமந்தபடி பூமிப் பயணத்தைத் தொடங்கியதாகக் கூறப்பட்டது.
அமெரிக்க விண்வெளி நிலையமான ‘நாசா’வில் பணியாற்றி ஓய்வுபெற்ற டாக்டர் பெக்கி விட்சன், 65, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, 39, ஹங்கேரி விண்வெளி வீரர் திபோர் காபு, 33, போலந்து விண்வெளி வீரர் ஸ்டவிஸ் உஸ்னக்ஸ்கி-விஸ்னியுஸ்கி, 41, நால்வரும் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் 18 நாள்கள் தங்கியிருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அமெரிக்காவின் ‘ஆக்ஸியான்’ நிறுவனம் ஏற்பாடு செய்த நான்காவது விண்வெளிப் பயணம் இது.
இந்தியா, போலந்து, ஹங்கேரி ஆகியவற்றைப் பொறுத்தவரை, கடந்த 40 ஆண்டுகளில் அந்நாடுகள் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பியது இதுவே முதன்முறை.
‘டிராகன்’ விண்கலம் 22 மணி நேரப் பயணத்திற்குப்பின், சிங்கப்பூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மாலை 5.31 மணியளவில் கலிஃபோர்னியா கடலோரப் பகுதியை ஒட்டிய பசிபிக் பெருங்கடலில் இறங்கியது.
கடந்த ஜூன் 25ஆம் தேதி, ‘நாசா’வின் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து அது தனது விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியது.