தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விபத்து: மன்னிப்பு கேட்டார் புட்டின்

1 mins read
997dfeda-d956-493e-9cc3-adcfbdfc573b
விபத்தில் மாண்ட 13 வயது சிறுவனின் உடலை ஏந்திச் சென்ற மக்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

மாஸ்கோ: அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதையடுத்து ர‌ஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் சனிக்கிழமையன்று (டிசம்பர் 28) அஸர்பைஜானிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, ர‌ஷ்ய ஆகாயத் தற்காப்புப் படைகளின் தாக்குதலால்தான் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட விமானம் ர‌ஷ்யாவின் குரோஸ்னி நகரில் தரையிறங்குவதற்கு முன்பு விபத்துக்குள்ளானது. அவ்வேளையில் ர‌ஷ்ய ஆகாயத் தற்காப்பு முறைகள் செயல்பட்டுக்கொண்டிருந்ததை திரு புட்டின் ஒப்புக்கொண்டார்.

அந்தத் துயரச் சம்பவத்தின் தொடர்பில் திரு புட்டின், அஸர்பைஜான் அதிபர் இல்ஹம் அலியெவ்விடம் தொலைபேசிவழி மன்னிப்புக் கேட்டுக்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், ர‌‌ஷ்ய ஆகாயத் தாக்குதலால்தான் அச்சம்பவம் நிகழ்ந்தது என அவர் கூறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

குரோஸ்னியில் தரையிறங்கவிருந்த அந்த விமானம் மேற்கு கஸாக்ஸ்தானில் விபத்துக்குள்ளானது. உக்ரேனின் ஆளில்லா வானூர்திகள் குரேஸ்னியைத் தாக்கியதாக மாஸ்கோ முன்னதாகச் சொன்னது.

இந்நிலையில், ர‌ஷ்யா மற்றவரின் தலையீட்டினால்தான் விமானம் விபத்துக்குள்ளானது என்று திரு அலியெவ், திரு புட்டினிடம் வலியுறுத்தியதாக பாக்கு (அஸர்பைஜான் தலைநகரம்) குறிப்பிட்டது.

இதுகுறித்து ஏஎஃப்பி செய்தி நிறுவனம், பாக்குவில் வழிப்போக்கர்களிடம் பேசியது. அவர்களில் பலர், அஸர்பைஜானின் பங்காளி நாடான ர‌ஷ்யா, அதிகாரபூர்வமான மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று கருத்துரைத்தனர்.

விபத்துக்குள்ளான விமானம், குரோஸ்னியில் பலமுறை தரையிறங்க முயற்சி செய்ததாக திரு புட்டின், திரு அலியெவ்விடம் கூறினார் என்று மாஸ்கோ தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்