மூச்சுக்குழாய் அடைத்துக்கொண்டதால் உயிரிழந்த குழந்தை

மூச்சுக்குழாய் அடைத்துக்கொண்டதால் உயிரிழந்த குழந்தை

1 mins read
7d0943a1-37cc-441d-a37a-44fe8a603b4f
படம்: - தமிழ் முரசு

மலாக்கா: மலேசிய மாநிலமான மலாக்காவில் குழந்தை பராமரிப்பாளர் ஒருவரின் வீட்டில் பெண் குழந்தை ஒன்று பால் அருந்திக்கொண்டிருந்தபோது மூச்சுக்குழாய் அடைத்துக்கொண்டதில் அது உயிரிழந்தது.

11 மாதக் குழந்தையின் தாயார் சம்பவம் குறித்து தமக்குக் காலை 11 மணிவாக்கில் குழந்தை பராமரிப்பாளரிடமிருந்து தகவல் கிடைத்ததாகக் கூறினார்.

35 வயதான அந்தத் தாயார் அதே நாளன்று காலை 7.30 மணிக்குத் தமது மகளைக் குழந்தை பராமரிப்பாளரின் வீட்டுக்குக் கொண்டுசென்றதாகக் கூறினார். அதன் பிறகு 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமது வேலையிடத்திற்குச் சென்றதாக அவர் தெரிவித்தார்.

குழந்தையை உடனடியாக அருகில் உள்ள பொது மருந்தகத்திற்கு அழைத்துச் செல்லும்படி அவர் பராமரிப்பாளரைக் கேட்டுக்கொண்டார். மருந்தகத்தைச் சென்றடைந்த சற்று நேரத்தில், குழந்தை மலாக்கா மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டுசெல்லப்பட்டது.

இருப்பினும், குழந்தை உயிரிழந்துவிட்டதை மருத்துவமனை உறுதிசெய்ததாகத் தாயார் கூறினார்.

சில மாதங்களுக்கு முன்னர் தமது குழந்தையைக் கவனித்துக்கொள்ள அந்தப் பராமரிப்பாளரை வேலைக்கு அமர்த்தியதாக அவர் சொன்னார்.

காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்குக் காத்துக்கொண்டிருப்பதாகவும், தற்போதைக்கு அதனை திடீர் மரணமாக வகைப்படுத்தியுள்ளதாகவும் மலாக்கா தெங்கா காவல்துறைத் தலைவர் கிறிஸ்டஃபர் பாடிட் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
குழந்தைமரணம்