பாலி: பாலி ஆளுநர் ஐ வயன் கோஸ்டர், ஒரு லிட்டருக்கும் குறைவான குடிநீர் போத்தல்களின் உற்பத்தியைத் தடைசெய்ய திட்டமிடப்படுவதாக அறிவித்துள்ளார். பல்வேறு சுற்றுப்புற பேரிடர்களுக்கு வித்திடும் கழிவுப் பிரச்சினைகளைக் களைய அந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
ஜனவரி 2026ஆம் ஆண்டிலிருந்து ஒரு லிட்டருக்கும் குறைவான குடிநீர் போத்தல்களின் உற்பத்தி தடை செய்யப்படும் என்ற புதிய கொள்கையை அறிவிக்க திரு கோஸ்டர் நேற்று (மே 29) டென்பசாரில் குடிநீர் போத்தல் உற்பத்தியாளர்களைச் சந்தித்தார்.
“பாலியின் சுற்றுப்புறத்தை, சுற்றுச்சூழலை, பாதுகாக்க ஒரு லிட்டருக்குக்கீழ் உள்ள குடிநீர் போத்தல்களின் உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும்,” என்ற திரு கோஸ்டர், “வர்த்தகங்கள் அவற்றிடம் எஞ்சியுள்ள ஒரு லிட்டர் குடிநீர் போத்தல்களை விற்றுவிட வேண்டும். அப்போதுதான் அடுத்த ஆண்டிலிருந்து ஒரு லிட்டருக்கும் குறைவான குடிநீர் போத்தல்களின் விற்பனை பாலியில் அறவே இருக்காது,” என்றார்.
பாலியில் கழிவுகளை நிரப்பும் இடங்கள் கிட்டத்தட்ட நிரம்பிவிட்டன என்றும் அவர் தெரிவித்தார். பெரும்பாலான கழிவுகள் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள், குறிப்பாக குடிநீர் போத்தல்களாக இருக்கின்றன என்றார் திரு கோஸ்டர்.
“எழில் நிறைந்த சுற்றுச்சூழல், கலாசாரம் ஆகியவற்றால் பாலி பல சுற்றுப்பயணிகளைக் கவர்கிறது. சுற்றுப்புறம் சேதமடைந்தால் பிறகு யாரும் இங்கு வர விரும்பமாட்டார்கள். சுற்றுப்பயணிகளும் முதலீட்டாளர்களும் இருக்கமாட்டார்கள். சுற்றுப்பயணம் இல்லாமல் பொருளியல் வளர்ச்சி இல்லை,” என்றார்.
புதிய கொள்கைக்கு மத்திய அரசாங்கத்தின் முழு ஆதரவு இருப்பதாகத் திரு கோஸ்டர் சொன்னார். சுற்றுப்புறத்துக்கு உகந்த கொள்கைகளைக் கடைப்பிடிப்பதில் வட்டாரத்தில் உள்ள இதர நாடுகளுக்குப் பாலி முன்னுதாரணமாக இருக்கும் என்றார் அவர்.