பாலி கொலை: சம்பந்தப்பட்ட இருவர் சிங்கப்பூரிலிருந்து நாடுகடத்தல்

2 mins read
8b2dee81-d6ae-40e1-a762-e88ba6e39395
பாலியில் ஆஸ்திரேலியர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆதாரங்களை காட்சியில் வைத்த அத்தீவின் காவல்துறை. - படம்: இபிஏ

இந்தோனீசியாவின் பாலி தீவில் ஆஸ்திரேலிய ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்டதில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் மூன்று ஆடவர்களில் இருவர் சிறிது நேரம் சிங்கப்பூரில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

பிறகு அவ்விருவரும் இந்தோனீசியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

இம்மாதம் 14ஆம் தேதியன்று ஆடவர்கள் இருவர் பாலியின் பாடுங் வட்டாரத்தில் உள்ள பங்ளா ஒன்றில் நுழைந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 32 வயது ஸிவன் ராட்மானோவிச் எனும் ஆடவரைச் சுட்டுக்கொன்றனர். மற்றோர் ஆடவரான சனார் கானிம், 34, அத்தாக்குதலில் மோசமான காயங்களுக்கு ஆளானார்.

சந்தேக நபர்கள் மூவரும் ஜகார்த்தாவில் உள்ள சுக்கார்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்துக்குச் சென்றனர். அவர்களில் ஒருவரான டிஎஃப்ஜே என்று பெயரின் முதல் எழுத்துகளை மட்டும் வைத்து அடையாளம் காணப்பட்ட 27 வயது ஆடவர் கம்போடியாவுக்குச் செல்லவிருந்த விமானத்தில் ஏற முயன்றபோது கைது செய்யப்பட்டார். அந்த விமானம் நடுவில் சிங்கப்பூரில் நிற்கவிருந்தது.

தாக்குதலுக்குக் கருவிகளைத் தந்தது, தப்பியோட திட்டமிட்டது ஆகிய செயல்களில் டிஎஃப்ஜே ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபர்களில் மற்ற இருவர் முதலில் தப்பிக்க முடிந்தது. அவர்கள் திங்கட்கிழமை (ஜூன் 16) சிங்கப்பூர் வழி கம்போடியா சென்றனர்.

ஆனால், கம்போடியாவைச் சென்றடைந்தவுடன் நாட்டுக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பின்னர் இருவரும் இந்தோனேசியா செல்லவிருந்த விமானத்தில் ஏற்றப்பட்டனர். அந்த விமானமும் சிங்கப்பூர்வழி செல்லவிருந்தது.

இருவரும் எம்சி, 22, பிஎம்டி, 27, என்று அடையாளம் காணப்பட்டனர்.

கம்போடியா சென்றுகொண்டிருந்த விமானம் சிங்கப்பூர் வந்தடைந்தபோது சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்துவைத்ததாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பிறகு அவர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) இந்தோனீசியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்