வாஷிங்டன்: மத்திய கிழக்குப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது இனி ஈரான் கைகளில்தான் உள்ளது என்று அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார்.
தெஹ்ரானுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்போது அமெரிக்கா தனது நிலையைத் தெளிவுபடுத்திவிட்டது என்றார் அவர்.
கடந்த வாரம் சனிக்கிழமை பாகிஸ்தானில் ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்கக் குழுவுக்குத் திரு வேன்ஸ் தலைமை ஏற்றிருந்தார்.
ஐந்து வாரங்களுக்கும் மேலாக நீடிக்கும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உடன்பாடு எட்டப்படாமலேயே அந்தப் பேச்சுவார்தை தோல்வியில் முடிவுற்றது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்கா திரும்பிய திரு வேன்ஸ், ‘ஃபாக்ஸ் நியூஸ்’ ஊடகத்திற்குப் பேட்டியளித்தார்.
“மோதலை முடிவுக்குக் கொண்டு வருவது இனி ஈரான் கைகளில்தான் உள்ளது என்பதே உண்மை. ஏனெனில், அமெரிக்கத் தரப்பிலிருந்து பல்வேறு அம்சங்களை எடுத்துரைத்துவிட்டோம். எங்களது நிலைப்பாட்டை அவர்களிடம் தெளிவுபடுத்திவிட்டோம்.
“குறிப்பாக, இரண்டு அம்சங்களில் உடன்பாடில்லை என அதிபர் டிரம்ப் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
“ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடு, வருங்காலத்தில ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்காது என்பதற்கான உறுதி ஆகியன அந்த இரு அம்சங்கள்,” என்று திரு வேன்ஸ் விளக்கினார்.

