துபாய்: துபாயின் எமிரேட்ஸ் விமான நிறுவனம், அதன் விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி போன்ற சாதனங்களை எடுத்துச் செல்லத் தடை விதித்துள்ளது.
கடந்த மாதம் 17ஆம் தேதி லெபானானிய போராளி அமைப்பான ஹிஸ்புல்லாவை குறி வைத்து இத்தகைய சாதனங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில், ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன. அடுத்த நாளே நூற்றுக்கணக்கான வாக்கி டாக்கிகள் வெடித்தன. இந்த இரண்டு சம்பவங்களில் குறைந்தது 37 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் எமிரேட்சின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
“துபாயிலிருந்து அல்லது துபாய் வழியாகப் பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளும் தங்களுடன் பேஜர், வாக்கி டாக்கி எடுத்துச் செல்ல தடை விதிக்கப்படுகிறது,” என்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை குறிப்பிடுகிறது.
“பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் பெட்டி அல்லது பையிலும் பயணப் பெட்டியிலும் இத்தகைய சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் துபாய் காவல்துறையால் பறிமுதல் செய்யப்படும்,” என்று அது கூறியுள்ளது.
ஹிஸ்புல்லா தருவித்த பேஜர்களில் எளிதில் கண்டுபிடிக்க முடியாத வெடிபொருள் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டதால் ஒரே நேரத்தில் வெடித்தன என்று லெபனானிய பாதுகாப்பு வட்டாரம் கூறுகிறது. இதன் பின்னணியில் இஸ்ரேல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.