இந்தோனீசியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை

இந்தோனீசியாவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை

கைப்பேசியைத் தொடர்ந்து பல மணிநேரம் பயன்படுத்தும் போக்கும் கூடியதால் நடவடிக்கை
படம்: இபிஏ

28 Mar 2026 - 6:21 pm

2 mins read

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் 16 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை (மார்ச் 28) முதல் அது நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்தோனீசிய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 70 மில்லியன் பேர் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள். ஆபத்தான தகவல்களைச் சிறுவர்கள் இணையத்தில் தெரிந்துகொள்ளக்கூடாது என்ற அடிப்படையில் அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்மூலம், தென்கிழக்காசிய நாடுகளில் சமூக ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் முதல் நாடாக இந்தோனீசியா உருவெடுத்துள்ளது.

அண்மைக் காலமாக இந்தோனீசியாவில் சமூக ஊடகங்கள் வாயிலாக இணையத் துன்புறுத்தல், ஆபாசப் படங்கள், மோசடிகள் உள்ளிட்டவை அதிகரித்தன. அதேபோல் கைப்பேசியைத் தொடர்ந்து பல மணிநேரம் பயன்படுத்தும் போக்கும் கூடியது. இதனால் மனநலம் சார்ந்த பிரச்சினைகள் வரலாம் என்று அஞ்சப்பட்டது.

புதிய விதிமுறைப்படி சிறுவர்களுக்கு அதிக ஆபத்து ஏற்படுத்தும் என வகைப்படுத்தப்பட்டுள்ள யூடியூப், டிக்டாக், இன்ஸ்டகிராம், ஃபேஸ்புக், எக்ஸ், ரோபிலாக்ஸ் உள்ளிட்ட தளங்கள் 16 வயது அல்லது அதற்குக் கீழ் உள்ள பயனர்களின் கணக்குகளை நீக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும்.

அதேபோல் சிறுவர்களுக்குக் குறைந்த ஆபத்து ஏற்படுத்தும் என வகைப்படுத்தப்பட்டுள்ள தளங்கள் தொழில்நுட்ப விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

எக்ஸ், பிகோ லைவ், டிக்டாக் உள்ளிட்ட தளங்கள் இந்தோனீசியாவின் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப தங்களது கொள்கைகளை மாற்றிக்கொண்டன. அதை அந்நாட்டுத் தகவல், மின்னிலக்க அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளது.

டிக்டாக் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்களின் கணக்குகளைப் படிப்படியாக நீக்கி வருகிறது.

விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்பதால் மெட்டா, கூகல் உள்ளிட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளன.

சமூக ஊடகத்தின் தாக்கம் சிறுவர்களைப் பாதிக்கக்கூடாது என்பதால் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா நடவடிக்கை எடுத்தது. அதைப் பின்பற்றி தற்போது உலக நாடுகள் பல சமூக ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

குறிப்புச் சொற்கள்