கடும் அபாய நிலையை எட்டிய பேங்காக் வெப்பக் குறியீடு

கடும் அபாய நிலையை எட்டிய பேங்காக் வெப்பக் குறியீடு

1 mins read
7d53a707-e95f-4fd8-bd54-faa884e5e9ed
திங்கட்கிழமை (மே 4) பேங்காக்கின் வெப்பக் குறியீடு 52 டிகிரி செல்சியசைத் தாண்டி, கடும் அபாய நிலையை எட்டியுள்ளது.  - படம்: இபிஏ

பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கை வெயில் சுட்டெரிக்கிறது.

இந்நிலையில், திங்கட்கிழமை (மே 4) பேங்காக்கின் வெப்பக் குறியீடு 52 டிகிரி செல்சியசைத் தாண்டி, கடும் அபாய நிலையை எட்டியுள்ளது.

இதன்காரணமாகப் பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்கவும் வெப்பத் தாக்கத்தின் அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர். யாரேனும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

கடும் அபாயம் நிலை என்பதால் வெளிப்புறத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்துப் பிரிவு மக்களும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

5 வயது வரையிலான சிறு குழந்தைகள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் நினைவூட்டினர்.

உடல் சோர்வு, தலைச்சுற்றல், தோல் வெடிப்புகள், தசைப்பிடிப்பு ஆகியவை கவனத்தில் கொள்ளவேண்டிய வேண்டிய அறிகுறிகளாகும்.

மக்கள் வானிலை எச்சரிக்கைகளைப் பின்பற்றும்படியும் தொடர்ந்து சுத்தமான தண்ணீரைக் குடிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டனர்.

வெப்பம் காரணமாக யாராவது மயக்கமடைந்தால், உடனடியாக 1669 என்ற அவசர உதவி எண்ணை பொதுமக்கள் அழைக்கவேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்