தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் பெண் ஒருவர் ஹோட்டலில் மாண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து பேங்காக் காவல்துறை அதிகாரிகள் 32 வயது சிங்கப்பூர் ஆடவரைத் தேடிவருகின்றனர்.
வத்தான வட்டாரத்தில் உள்ள 50 மாடி தனியார் வீட்டுக் கட்டடத்தில் உள்ள அறையில் கிடந்த தாய்லாந்தைச் சேர்ந்த பெண்ணின் சடலம் குறித்து புதன்கிழமை (26 மார்ச்) காவல்துறைக்குத் தகவல் வந்தது.
சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் அந்த அறையின் கதவுகள் பூட்டப்படாததைக் கண்டனர். அறையின் கழிவறையில் நிர்வாண நிலையில் கிடந்த 30 வயது பெண்ணின் உடல் போர்வையால் சுற்றப்பட்டிருந்தது. பெண்ணின் உடலில் காயங்களும் தலையில் ரத்தமும் காணப்பட்டன.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஆடவரின் காதலி என்று நம்பப்படும் அந்தப் பெண் வடகிழக்குத் தாய்லாந்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
பெண்ணின் நண்பர்களில் இருவர் மார்ச் 24ஆம் தேதி மாலையிலிருந்து பெண்ணைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று இதற்குமுன் உள்ளூர்க் காவல்துறை அதிகாரிகளிடம் புகாரளித்திருந்தனர்.
மாண்ட பெண்ணின் விலையுயர்ந்த கடிகாரங்களும் கைப்பகளும் சம்பவ இடத்தில் காணவில்லை என்பதைப் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்ததாக ‘த நேஷன்’ என்ற உள்ளூர் நாளேடு சொன்னது.
சிங்கப்பூர் ஆடவருடன் பழகிவந்த பெண் சமூக ஊடகப் பதிவுகளில் மகிழ்ச்சியாக இருப்பது போல தோன்றினாலும் காதலுடனும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதையும் வன்கொடுமைக்கு ஆளானதையும் பகிர்ந்துகொண்டதாக பெண்ணின் நண்பர்கள் குறிப்பிட்டனர்.
மார்ச் 23ஆம் தேதி மாலை 6.40 மணியளவில் ஆடவரும் பெண்ணும் ஹோட்டல் அறையைவிட்டு வெளியேறியது கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. அதையடுத்து இரவு 9.17 மணிக்கு ஹோட்டல் அறைக்கு இருவரும் திரும்பிய பின் ஆடவர் மட்டும் தனியாக அறையைவிட்டு வெளியேறினார்.
தொடர்புடைய செய்திகள்
மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் அறைக்கு மீண்டும் திரும்பிய நபர் அறையைவிட்டு தனியாக வெளியேறி மார்ச் 25ஆம் தேதி பிற்பகல் 3.15 மணிக்குக் கருப்பு காரில் ஒரு பெட்டியுடன் அங்கிருந்து கிளம்பினார். ஆடவர் சென்ற வாகனம் மாண்ட பெண்ணின் பெயரில் பதிவுசெய்யப்பட்டதைக் காவல்துறை அதிகாரிகள் உறுதிசெய்தனர்.
ஆடவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

