பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள மதுக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) நடந்த தீ விபத்தில் 30 பேர் இதுவரை மாண்டுவிட்டனர்.
அவர்களில் 27 பேரின் அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த மூவரும் மரணமடைந்தோரின் எண்ணிக்கையில் அடங்குவர். மீதம் உள்ள மூவரின் அடையாளங்கள் இதுவரை தெரியவில்லை.
அன்றைய தினம் மதுக்கூடத்தில் இசை நிகழ்ச்சி படைத்துக்கொண்டிருந்த ‘டொசாகான்’ குழுவைச் சேர்ந்த இருவரும் உயிரிழந்தனர். அக்குழுவில் மொத்தம் பதினோரு உறுப்பினர்கள் அன்றைய தினம் இருந்தனர். இதனை பேங்காக் போஸ்ட் ஊடகம் உறுதிப்படுத்தியது.
மேலும் இரு இசைக்குழுவினர் காயம் அடைந்தனர். அவர்கள் உட்பட ஏறத்தாழ 70 பேருக்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுக்கு ஆளாயினர். அவர்களில் தீப் புகையை சுவாசித்தோரும் உள்ளடங்குவர் என்று தாய்லாந்து அதிகாரிகள் கூறினர்.
‘டொசாகான்’ இசைக்குழுவின் தலைவரான அதிபாட் ஐஸ் விஜார்ன் அந்தத் துயரச் சம்பவத்தை கவலையுடன் விவரித்தார்.
ராங் பீர் நா லாட் ஃபிராவ் மதுக்கூடத்தில் அவரது இசைக் குழு நிகழ்ச்சி படைத்துக்கொண்டிருந்தபோது தீ எற்பட்டதை ‘கீ போர்ட்’ கருவியை இசைத்துக்கொண்டிருந்த குழு உறுப்பினர் முதலில் கண்டறிந்து அனைவரிடமும் தப்பிச் செல்லும்படி குரல் எழுப்பியதாக அவர் கூறினார்.
ஆனால் அதற்குள்ளாக மின்தடை ஏற்பட்டு, அனைத்து விளக்குகளும் அணைந்துவிட்டதாகவும் பிறகு யார் எங்கு இருந்தார்கள் என்பதை அறியமுடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்தார். பெருங்குழப்பத்தில் அனைவரும் தீப் பிழம்புகளுக்கும் புகை மூட்டத்துக்கும் இடையே தப்பிச் செல்ல நேர்ந்தது.
தீயைக் கண்டு எச்சரிக்கை விடுத்த கீ போர்ட் கலைஞரான குவாங் என்பவரும் அவரது இசைக் குழுவின் பிரீஸ் என்ற பெண் உறுப்பினரும் தீச் சம்பவத்தில் உயிரிழந்தனர்.
அந்தப் பெண் உறுப்பினரின் சடலம் வெளியேற்றப்பட்ட காட்சி அவரது மனதை உலுக்கியதை அதிபாட் நினைவுகூர்ந்தார். அதிபாட்டுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இசைக் குழுவின் டிரம்ஸ் வாசிக்கும் கலைஞர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
காயமுற்றோர் விவரம்
பேங்காக் வட்டார அலுவலகம், மொத்தம் 75 நபர்கள் காயமுற்றதாகத் தெரிவித்தது. அவர்களில் 24 பேர்கள் கடுமையான காயங்களுக்கு உட்பட்டதாகவும் 15 நபர்கள் மிதமான காயங்களுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டது.
மேலும் 36 பேருக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டு அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபிறகு இல்லம் திரும்பிவிட்டதாகவும் அலுவலகம் தெரிவித்தது.

