தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பங்ளாதேஷ்: வெள்ளத்தால் 1.1 மில்லியன் டன் அரிசி சேதம்

1 mins read
ac40068a-32c7-4418-938c-2f79988c1b54
ஆகஸ்ட் மாத இறுதியில் ஃபஸில்பூர் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மூழ்கிக் காணப்பட்ட பள்ளி வளாகம் ஒன்று. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 3

டாக்கா: பங்ளாதேஷில் ஏற்பட்ட வெள்ளத்தால் 1.1 மில்லியன் டன் அரிசி வீணானதாக அந்நாட்டு வேளாண் அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன.

அரிசி அங்குள்ள மக்களின் முக்கிய உணவாக விளங்குகிறது. இந்நிலையில் உணவு விலையேற்றத்துக்கு இடையே பங்ளாதேஷ் அரசாங்கம் அரிசி இறக்குமதியை அதிகரித்துள்ளது.

பங்ளாதேஷில் ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் பெய்த கனமழையால் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் 75 பேர் உயிரிழந்தனர். மில்லியன்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். அந்தப் பகுதிகளில் பயிர்கள் பெருமளவில் சேதமடைந்தன.

இவ்வாண்டு வெள்ளத்தால் அரிசி உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கூறிய அமைச்சு, அரசாங்கம் 500,000 டன் அரிசியை இறக்குமதி செய்ததாகக் கூறியது. விரைவில் தனியார் துறைக்கும் அரிசி இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக போராட்டங்கள் வலுத்ததை அடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிற்குத் தப்பிச் சென்றதால் பங்ளாதேஷில் ஆகஸ்ட் மாதம் இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. அண்மை மாதங்களில் ஏறக்குறைய 20 விழுக்காடு உயர்ந்த உணவு விலையை நிலைப்படுத்த அது திணறி வருகிறது.

அண்மைய வெள்ளத்தில் நெற்பயிர் மட்டுமன்றி 200,000 டன்னுக்கும் மேற்பட்ட காய்கறிகள் உள்ளிட்ட இதர விளைபொருள்களும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அரிசி உற்பத்தியில் உலக அளவில் மூன்றாவது நிலையில் உள்ள பங்ளாதேஷ் வழக்கமாக ஆண்டுக்கு ஏறத்தாழ 40 மில்லியன் டன் அரிசியை உற்பத்தி செய்யும்.

குறிப்புச் சொற்கள்