டாக்கா: பங்ளாதேஷ் விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில் குறைந்தது 19 பேர் மாண்டனர்.
இந்தச் சம்பவம் பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் திங்கட்கிழமை (ஜூலை 21) நிகழ்ந்தது.
50க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பெரியவர்களும் சிறுவர்களும் அடங்குவர்.
அந்த எஃப்7 ரக பயிற்சி விமானம் சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 3.06 மணிக்குப் விமானப் படை முகாமிலிருந்து புறப்பட்டுச் சென்றதாகப் பங்ளாதேஷ் ராணுவத்தின் மக்கள் தொடர்புப் பிரிவு தெரிவித்தது.
விழுந்து நொறுங்கிய விமானம் கொழுந்துவிட்டு எரிவதையும் அதிலிருந்து அடர்ந்த புகை கிளம்புவதையும் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது.
அதை மக்கள் தூரத்திலிருந்து பார்ப்பதைக் காணொளியில் காண முடிந்தது.
தீயணைப்பாளர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைப்பதையும் கல்லூரிக் கட்டடத்தின் பக்கவாட்டில் நொறுங்கிய விமானம் கிடப்பதையும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட காணொளிகள் காட்டின.
மக்கள் அலறுவதையும் அவர்களுக்குச் சிலர் ஆறுதல் கூறுவதையும் காணொளிகளில் பார்க்க முடிந்தது.
தொடர்புடைய செய்திகள்
“பள்ளி முடிந்ததும் எனது பிள்ளைகளை அழைத்து அங்கிருந்து புறப்பட்டேன். பள்ளியின் நுழைவாயிலை அடைந்தபோது எனக்குப் பின்னால் வெடிச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தபோது தீப்பிழம்புகள் மற்றும் புகை மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தன,” என்று அந்த வளாகத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் திரு மசூது தாரிக் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் திரு முகம்மது யூனோஸ் தெரிவித்தார்.
விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்றும் அனைத்து வகை உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
“இந்த விமான விபத்து காரணமாக விமானப் படையினர், மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், ஊழியர்கள் உட்பட பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஏற்பட்ட இழப்பு மிகவும் மோசமானது,” என்றார் திரு யூனோஸ்.

