‌ஷேக் ஹசினாவை ஒப்படையுங்கள்: இந்தியாவிடம் பங்ளாதே‌ஷ்

2 mins read
c860ffb2-af85-401c-9226-2d6a9d17063c
முன்னாள் பங்ளாதே‌ஷ் பிரதமர் ‌ஷேக் ஹசினா. - கோப்புப் படம்: இபிஏ

டாக்கா: நீதிமன்ற நடைமுறைகளை மேற்கொள்வதற்காக முன்னாள் பிரதமர் ‌ஷேக் ஹசினாவை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவிடம் பங்ளாதே‌ஷ் கூறியுள்ளது.

பங்ளாதே‌‌ஷ் வெளியுறவு அமைச்சின் தற்காலிகத் தலைவர் திங்கட்கிழமையன்று (டிசம்பர் 23) அவ்வாறு கூறினார். திருவாட்டி ஹசினா, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்குத் தப்பியோடினார்.

அண்டை நாடுகளான இந்தியாவுக்கும் பங்ளாதே‌ஷுக்கும் இடையே வலுவான வர்த்தக, கலாசாரத் தொடர்புகள் இருந்து வருகின்றன. திருவாட்டி ஹசினாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதையடுத்து இருநாட்டு உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.

பங்ளாதே‌ஷில் தனக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து திருவாட்டி ஹசினா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் பங்ளாதே‌ஷுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார். அப்போது பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு ஆக்கபூர்வமான உறவை வளர்க்கும் நம்பிக்கை கொண்டுள்ளதாக இரு நாடுகளும் தெரிவித்தன.

அதற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு திருவாட்டி ஹசினாவைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு பங்ளாதே‌ஷ், இந்தியாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

“சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க அவரை (திருவாட்டி ஹசினாவை) எங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று பங்ளாதே‌ஷ் அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது. அதை விவரிக்கும் அரசதந்திர குறிப்பை நாங்கள் இந்திய அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ளோம்,” என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத பங்ளாதே‌‌ஷ் இடைக்கால அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சுக்கான ஆலோசகர் டூஹித் ஹொசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே நடந்த அரசதந்திர ரீதியான கலந்துறவாடலைப் பற்றி அவர் பேசினார்.

சட்ட ரீதியான நடவடிக்கைகளைப் பற்றி அவர் விவரிக்கவில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு திருவாட்டி ஹசினாவின் மகன் சஜீப் வாஸெத்திடம் கேட்கப்பட்டது. அதுக்கு அவர் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.

“(திருவாட்டி ஹசினாவை) திருப்பி அனுப்புமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் தொடர்பில் பங்ளாதே‌ஷ் தூதரகத்திடமிருந்து இன்று எங்களுக்கு அரசதந்திரக் குறிப்பு கிடைத்ததை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். தற்போதைக்கு இதுகுறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கப்போவதில்லை,” என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்