புதுடெல்லி: முன்னாள் பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா பொய்யான கருத்துகளை வெளியிடுவதை நிறுத்தவேண்டும் என்று இந்தியாவிடம் பங்ளாதேஷ் கோரிக்கை விடுத்துள்ளது.
பங்ளாதேஷில் 2024ஆம் ஆண்டில் மாணவர்கள் தலைமையில் நடந்த புரட்சியின்போது ஹசினாவின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
அதனால் 77 வயது திருவாட்டி ஹசினா இந்தியாவுக்குத் தப்பிச்சென்று அடைக்கலம் பெற்றார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை ஹசினா இணையத்தின் மூலம் அவரது கட்சித் தொண்டர்களிடம் பேசினார்.
“தற்போதைய தற்காலிக பங்ளாதேஷ் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும், தன்னை பதவியில் இருந்து சட்டவிரோதமாக அவர்கள் வெளியேற்றினர்,” என்று தெரிவித்தார்.
இதையடுத்து டாக்காவில் உள்ள ஹசினாவின் தந்தையுடைய வீட்டை இடிக்க அந்நாட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) முயன்றனர். அந்தக் கட்டடத்தை இடிக்கவும் தீவைக்கவும் தேவையான பொருள்களை அவர்கள் கொண்டு சென்றனர்.
திருவாட்டி ஹசினாவின் தந்தை பங்ளாதேஷின் முதல் அதிபரான ஷேக் முஜிபுர் ரஹ்மான்.
ஹசினாவின் கருத்துகளால் நாட்டின் அமைதி பாதிக்கப்படுகிறது என்றும் இது அக்கறைக்குரிய ஒன்று என்றும் பங்ளாதேஷ் வெளியுறவு அமைச்சு டாக்காவில் உள்ள இந்தியத் தூதருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தியா, ஹசினா தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பங்ளாதேஷ் கேட்டுக்கொண்டது.