பங்ளாதேஷ் தேர்தல்: பிரதமராகிறார் தாரிக் ரஹ்மான்

பங்ளாதேஷ் தேர்தல்: பிரதமராகிறார் தாரிக் ரஹ்மான்

2 mins read
af45e4b4-58ae-4951-a4fc-e5b20529cae9
பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரசார சுவரொட்டி. - படம்: ஏஎஃப்பி

டாக்கா: பங்ளாதேஷ் பொதுத் தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ள பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சி ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக் கட்டிலில் அமர்கிறது.

வியாழக்கிழமை (பிப்ரவரி 12) நடைபெற்ற தேர்தலில் இரண்டில் மூன்று பங்கு இடங்களில் அக்கட்சி வென்றுள்ளது. அது, அதன் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து 299 இடங்களில் 212 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் பிரதமர் பொறுப்பை ஏற்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 70 இடங்களில் மட்டுமே வென்றுள்ளன.

பொதுத் தேர்தல் முடிந்துள்ளதால் நாட்டில் உள்ள அரசியல் குழப்பங்கள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாரிக் ரஹ்மான், மறைந்த முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன். ஏறக்குறைய 18 ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்த அவர், டிசம்பரில் நாடு திரும்பினார்.

நாட்டின் நிலைத்தன்மையைக் கட்டிக்காப்பது, பொருளியலை மீட்டெடுப்பது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையே மேம்படுத்துவது, ஜவளித் துறை உட்பட நாட்டின் முக்கிய தொழில்துறைகளைச் சீரமைப்பது உள்ளிட்ட பல சவால்களை அவர் எதிர்நோக்குகிறார்.

வியாழக்கிழமை இரவிலிருந்து விடிய விடிய வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தேசியவாதக் கட்சி, நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டது. நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தவும் அது அழைப்பு விடுத்தது.

பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் வெற்றிக் கொண்டாட்டங்களோ ஊர்வலமோ நடத்தப்படாது என்று அக்கட்சியின் அறிக்கை தெரிவித்தது.

2024ல் இடஒதுக்கீடு தொடர்பான பிரச்சினையில் ஜூலையில் தொடங்கி ஆகஸ்ட் வரை அப்போதைய பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

அது வன்முறையாக மாறி கட்டுக்கடங்காமல் போனதால் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசினா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார்.

இதையடுத்து, நோபெல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்தப் பொதுத் தேர்தலில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சிக்கு போட்டியிட தடை விதிக்கப்பட்டது.

அதனால், இது ஒரு மோசடித் தேர்தல் என்று ஷேக் ஹசினா வருணித்துள்ளார்.

இதற்கிடையே, இந்தியப் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பங்ளாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பிஎன்பி கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே பன்முக உறவுகளை வலுப்படுத்தவும் புதிய அரசுடன் இணைந்து பணியாற்றவும் ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவும் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.

பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் பிப்ரவரி 13ஆம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டுச் செல்கிறார். அவருக்குப் பலர் வாழ்த்துத் தெரிவிக்கின்றனர்.
பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் பிப்ரவரி 13ஆம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டுச் செல்கிறார். அவருக்குப் பலர் வாழ்த்துத் தெரிவிக்கின்றனர். - படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்