டாக்கா: அரசாங்க வேலை ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பங்ளாதேஷ் அரசாங்கம் ஜூலை 23ஆம் தேதி அதிகாரபூர்வமாக ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தொடர்பில் போராட்டம் நடத்திய அந்நாட்டு மாணவர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்பதாக இது அமைகிறது.
போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் ஏறக்குறைய 150 பேர் கொல்லப்பட்டனர்.
தலைநகர் டாக்காவிலும் முக்கிய நகரங்களிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைதி நிலவுகிறது. இணையம், தொலைத் தொடர்பு ஆகியவற்றை பங்ளாதேஷ் அரசாங்கம் முடக்கியுள்ளது.
இருப்பினும், பாதுகாப்பு நிலவரம் கட்டுக்குள் இருப்பதாகக் கூற இயலாது என்று ராணுவத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறினார். தலைநகரை ஹெலிகாப்டர் மூலம் சுற்றிப் பார்த்த பிறகு ஜூலை 23ஆம் தேதி காலை அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக, பிற்பகல் வேளைகளில் நான்கு மணி நேரம் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று ஜூலை 22ஆம் தேதி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பங்ளாதேஷின் சுதந்திரத்திற்குப் போராடியோரின் குடும்பத்தினர் போன்றோருக்கு அரசாங்க வேலைகளில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டை ஒதுக்கும் முறையை மீண்டும் அமலுக்குக் கொண்டுவர ஜூன் மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் 2018ஆம் ஆண்டில் அந்த ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்தது. பெரும்பாலான இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும்படி உச்ச நீதிமன்றம் தற்போது பிறப்பித்துள்ள உத்தரவை பங்ளாதேஷ் அரசாங்கம் ஜூலை 22ஆம் தேதி பின்னேரத்தில் ஏற்றுக்கொண்டுள்ளது.
அரசாங்கம் இவ்வாறு ஏற்றுக்கொள்வதை அதிகாரபூர்வமாக அது வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஊடகங்கள் கூறுகின்றன.
வேலை ஒதுக்கீட்டு முறை ரத்து, பிரதமர் ஹசீனா பொது மன்னிப்பு வழங்குதல், வன்முறையை அடுத்து மூடப்பட்ட பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது உட்பட மொத்தம் எட்டுக் கோரிக்கைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர். அவற்றை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு 48 மணி நேரம் அவர்கள் கெடு விதித்துள்ளனர்.

