டாக்கா: பங்ளாதேஷில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் குறைந்தபட்ச மாதச் சம்பளம் புதன்கிழமை (நவம்பர் 25) 36 விழுக்காடு உயர்த்தப்பட்டு, 139 அமெரிக்க டாலராக (179 வெள்ளி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளத்தை இரட்டிப்பாக்கக் கோரி ஊழியர்கள் பல வாரங்களாகப் போராட்டம் நடத்தினர். இதனால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு, நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டு, உற்பத்தி பாதிக்கப்பட்டது. காவல்துறையுடன் மோதல்களும் ஏற்பட்டன.
நான்கு மில்லியனுக்கும் மேற்பட்டோர் பணியாற்றும் இத்துறை, எச்&எம், ஸாரா, வால்மார்ட், டார்கெட், கேப் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்களுக்கு ஆடைகளை வழங்குகிறது.
பங்ளாதேஷின் ஏற்றுமதி வருவாயில் 80 விழுக்காட்டிற்கும் மேல் ஆடை துறை ஈட்டுகிறது.
அரசாங்கம் நியமித்த ஆறு பேர் கொண்ட சம்பள வாரியம், கிட்டத்தட்ட 12 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதிகாலை 2 மணியளவில் புதிய சம்பளத்திற்கு 4-2 வாக்குகளில் ஒப்புதல் அளித்தது.
நால்வர் 17,000 டாக்கா (179 வெள்ளி) சம்பளத்தை ஆதரிக்க, இருவர் ஊழியர்களின் 18,000 டாக்கா கோரிக்கைக்கு ஆதரவளித்ததாக ஊழியர் பிரதிநிதி பாபுல் அக்தர் கூறினார்.
நான்கு நிலைகளில் 17,000 முதல் 21,500 டாக்கா வரை சம்பளம் வழங்கப்படும். அது 2023ல் நிர்ணயிக்கப்பட்ட 12,500 டாக்கா சம்பளத்தைவிட 4,500 டாக்கா அதிகம்.
ஊழியர்கள் முதலில் 32,000 டாக்கா கோரி, பின்னர் 18,000 டாக்காவாகக் குறைத்தனர். தொழிற்சாலை உரிமையாளர்கள் 15,000 டாக்காவிலிருந்து 17,000 டாக்காவாக உயர்த்தினர்.
இப்போது அறிவிக்கப்பட்ட மிதமான சம்பள உயர்வு அமைதியின்மையைத் தணிக்குமா என்பது சந்தேகமே என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
