பங்ளாதேஷ் காவல்துறையுடன் ஆடைத் தொழிலாளர்கள் மோதல்; ஒருவர் பலி

2 mins read
33324c75-02c1-4a0a-9eb7-88329882163c
அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கிறது. - படம்: ஏஎஃப்பி

டாக்கா: பங்ளாதேஷில் காவல்துறையினருக்கும் ஆடைத் தொழிலாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒரு பெண் ஊழியர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அந்நாட்டில் உள்ள ஆடைத் தொழிலாளர்கள் கூடுதல் சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் என்று கோரிவருகின்றனர்.

முன்னதாக, பங்ளாதேஷ் அரசாங்கம் அந்நாட்டிலுள்ள நான்கு மில்லியன் ஆடைத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச மாதாந்தரச் சம்பளத்தை 56.25 விழுக்காடு உயர்த்தியது.

அந்த முடிவைத் தொழிற்சங்கங்கள் உடனடியாக நிராகரித்தன.

பங்ளாதேஷின் 55 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வருடாந்தர ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 85 விழுக்காடு அந்நாட்டின் 3,500 ஆடைத் தொழிற்சாலைகளிலிருந்து வருகின்றன. அவை லீவைஸ், ஸாரா, எச்&எம் உள்ளிட்ட உலகின் முன்னனி ஆடை அலங்கார நிறுவனங்களுக்கு ஆடைகளை விநியோகிக்கின்றன.

இருப்பினும், அந்தத் துறையில் உள்ள நான்கு மில்லியன் ஊழியர்களின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். அவர்களின் குறைந்தபட்ச மாதாந்தரச் சம்பளம் 8,300 டாக்கா (S$102).

இதனையடுத்து, தங்களது சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தித் தரக் கோரி, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அண்மைய நாள்களில் வன்முறைச் சம்பவங்களும் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அரசால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் குழு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கிறது. அதில் உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழிற்சங்கத்தினர், சம்பள நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்குவர்.

ஆடைத் தொழிலாளர்களுக்குப் புதிய குறைந்தபட்ச மாதாந்தரச் சம்பளம் 12, 500 டாக்கா என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகக் குழுச் செயலாளர் ராயிஷா ஆஃபுரோஸ் கூறினார்.

தொழிற்சங்கள் அதனை உடனடியாக நிராகரித்து, குறைந்தபட்ச சம்பளமாக 23,000 டாக்கா வழங்கப்படவேண்டும் என்று கோரிவருகின்றன.

பணவீக்கம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால், தங்கள் உறுப்பினர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாய்த் தொழிற்சங்கங்கள் கூறின.

குறிப்புச் சொற்கள்
சம்பளம்போராட்டம்