பங்ளாதேஷ் எரிவாயு நெருக்கடி: வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் பாதிப்பு

பங்ளாதேஷ் எரிவாயு நெருக்கடி: வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் பாதிப்பு

2 mins read
dc447569-2ad9-4742-8bcc-497262f3a911
ஒரு காலத்தில் இரவு பகலாக இயங்கி வந்த அஷுகஞ்ச் உர உற்பத்தி ஆலை எரிவாயு பற்றாக்குறையால் துருப்பிடித்த நிலையில் உள்ளது. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

டாக்கா: பங்ளாதேஷில் ஏற்பட்டுள்ள எரிவாயு நெருக்கடி அந்நாட்டில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தொழிற்சாலைகள் மூடப்படுவதுடன் மின்வெட்டுகளும் நிகழ்ந்து வருகின்றன.

அத்துடன் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பான போராட்டங்களும் பங்ளாதேஷில் வெடித்துள்ளன.

குறிப்பாக, 1,200க்கும் மேற்பட்டோர் வேலை செய்த, நாள் ஒன்றுக்கு 1,000 டன்னுக்கும் அதிகமான உரத்தை உற்பத்தி செய்த அஷுகஞ்ச் ஆலை ஏற்கெனவே இழுத்து மூடப்பட்டு விட்டது.

நாட்டின் 170 மில்லியன் மக்களுக்கான பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் பெரிதும் நம்பியிருந்த யூரியா உரத்தை உற்பத்தி செய்ய, அந்த ஆலை ஒருகாலத்தில் இரவு பகலாக இயங்கி வந்தது. உரங்களை உற்பத்தி செய்ய அந்த அரசு நிறுவனம் இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்தியது.

எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து செயல்பாட்டை நிறுத்திவிட்ட அந்த ஆலை தற்போது துருப்பிடித்த ஒரு வெற்றுக்கட்டடமாக மாறியுள்ளது. அதன் பிரம்மாண்டமான கட்டமைப்புகள் ஓராண்டுக்கும் மேலாகச் செயலற்று நிற்கின்றன.

எரிவாயுத் துறையில் அரசாங்கம் போதிய முதலீடு செய்யாததால் எரிவாயு உற்பத்தி ஏற்கெனவே குறைந்து வந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக எரிவாயு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக, ஆடை உற்பத்தி ஆலைகள் உட்பட நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் உற்பத்தியைக் குறைத்து வருகின்றன அல்லது மூடப்படுகின்றன.

பங்ளாதேஷ் உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதி நாடு. அந்நாட்டின் மொத்த ஏற்றுமதி வருவாயில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு ஆடை ஏற்றுமதியில் இருந்தே கிடைக்கிறது.

எரிவாயு நெருக்கடி வீடுகளையும் விட்டு வைக்கவில்லை. வீடுகளுக்கான குழாய் வழி எரிவாயு விநியோகம் அடிக்கடி துண்டிக்கப்படுகிறது.

அத்துடன், எரிவாயுவைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் நிலையங்கள், தேவையை ஈடுசெய்ய முடியாமல் திணறுவதால் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்