தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அவாமி லீக் கட்சியை முடக்கிய பங்ளாதே‌ஷ் அரசு

2 mins read
c99d8d04-cbe2-4b6a-89f2-f90cca4ab1ef
பங்ளாதே‌ஷின் முன்னாள் ஆளுங்கட்சியான அவாமி லீக்கின் நடவடிக்கைகளை முடக்க கோரிய ஆர்ப்பாட்டக்காரர்கள். - படம்: ராய்ட்டர்ஸ்

டாக்கா - பங்ளாதே‌ஷ் இடைக்கால அரசாங்கம், முன்னாள் பிரதமர் ‌‌‌ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை முன்னிட்டு பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தின்கீழ் தடைகள் விதிக்கபட்டன.

திருவாட்டி ஹசினாவின் அரசாங்கம் கவிழ்ந்ததை அடுத்து மாணவர்களைக் கொண்டு உருவான தேசியக் குடிமக்கள் கட்சி, பல நாள் ஆர்ப்பாட்டங்கள் செய்ததைத் தொடர்ந்து தடைகள் சனிக்கிழமை (மே 10) பின்னேரம் அமல்படுத்தப்பட்டன.

ஜமாத்- அ -இஸ்லாமி, எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய, வலசாரி கட்சிகள், அவாமி லீக் கட்சியைப் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தும்படி ஆர்ப்பாட்டங்களில் இறங்கின.

நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் மரணம் தொடர்பில் கட்சியும் அதன் தலைமைத்துவமும் விசாரிக்கப்படுகின்றன. அனைத்துலகக் குற்றவியல் தீர்ப்பாயத்தில் அந்த விசாரணை முடியும்வரை அவற்றின் நடவடிக்கைகள் மீதுள்ள தடை நீடிக்கும் என்று இடைக்கால அரசாங்கம் அறிவித்தது.

தனிநபர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகள், அமைப்புகளையும் விசாரிக்க வகையும் செய்யும் விதமாக பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்திலும் அரசாங்கம் திருத்தம் செய்தது. ஆட்சியில் இருந்தபோது புரிந்த குற்றங்களுக்காக அவாமி லீக் கட்சி ஒட்டுமொத்தமாக விசாரிக்கப்பட அது வழிவகுக்கிறது.

1949ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அவாமி லீக் கட்சி, “சட்டவிரோத அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களும் சட்டவிரோதமானவை,” என்று அதன் ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.

கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் நாட்டைவிட்டு தப்பியோடி இந்தியாவில் திருவாட்டி ஹசினா தஞ்சமடைந்ததை அடுத்து பங்ளாதே‌ஷில் பதற்றங்களும் ஆர்ப்பாட்டங்களும் அண்மை மாதங்களில் அதிகரித்துள்ளன.

தற்போது அமைதிக்கான நோபெல் பரிசு பெற்ற திரு முகமது யூனுஸ் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்துகிறார்.

நாட்டில் சீர்த்திருத்தங்கள் செய்யப்படும் என்று வாக்குறுதியளித்த திரு யூனுஸ், தேர்தல் 2026ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படக்கூடும் என்றார்.

குறிப்புச் சொற்கள்