டாக்கா: 'ஹிஜ்ரா' என்றழைக்கப்படும் திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவராக பங்ளாதேஷ் அரசாங்கம் அங்கீகரித்துப் பத்தாண்டுகள் ஆகிவிட்டன.
ஆனாலும், ஒரே பாலின உறவு சட்டவிரோதமாகக் கருதப்படும் அந்நாட்டில் திருநங்கைகளின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் ஓரங்கட்டப்பட்டவர்களாகவே இருந்து வருகின்றனர்.
அவர்களில் பலரும் வறுமையில் உழல்கின்றனர்; முறையான கல்விக்கும் வழியில்லை, வேலையும் கிடைப்பதில்லை. இதனால், அவர்களில் பலரும் பிச்சையெடுத்து அல்லது பாலியல் தொழிலில் ஈடுபட்டே காலந்தள்ளி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருநங்கைகளையும் சமூகத்தில் ஓர் அங்கத்தினராக ஏற்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, பள்ளி மாணவர்களுக்கான பாடநூலில் அவர்களைப் பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.
11 முதல் 13 வயதிற்குட்பட்ட மில்லியன்கணக்கான பள்ளிக் குழந்தைகளுக்கு இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி புதுப் பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில்தான் திருநங்கைகள் குறித்த பாடம் இடம்பெற்றுள்ளது.
ஒப்பனைக் கலைஞர், வளர்ச்சிப் பணியாளர், நகர மேயர் போன்ற மதிக்கத்தக்க பணிகளில் அவர்கள் இருப்பதுபோன்ற படங்களும் ஆணாகப் பிறந்த குழந்தை பின்னர் பெண் பெயரைச் சூட்டிக்கொண்டு, திருநங்கைச் சமூகத்தில் சேர்ந்து வாழ்வது போன்ற ஒரு புனைகதையும் அதில் இடம்பெற்றுள்ளன.
"சிறிய அளவில் மட்டுமே இந்த முன்னோட்டச் சோதனையை மேற்கொண்டுள்ளோம். இதற்கு மாணவர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்குமுன் அவர்கள் முற்றிலும் அறிந்திராத விஷயம் இது. அவர்களுக்கு இது புதிதாக இருக்கிறது. அவர்களும் அதனை நன்கு ஏற்றுக்கொண்டுள்ளனர்," என்றார் தேசிய பாடத்திட்ட, பாடநூல் கழக உறுப்பினரான திரு முகம்மது மொஷியுஸ்ஸமான்.
"அவர்களும் நம்மைப் போன்று மனிதர்கள்தான். பாடப் புத்தகத்தின் மூலமே அவர்களைப் பற்றி அறிந்துகொண்டோம். அவர்கள் முன்னேற உதவ வேண்டும் என்று நினைக்கிறோம்," என்றார் ஃபாத்தியா ஆலம், 12, என்ற பள்ளி மாணவி.
தொடர்புடைய செய்திகள்
ஆனாலும், இதற்கு எதிர்ப்பும் இருக்கவே செய்கிறது. அந்தப் பாடநூல்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று அண்மையில் தாக்காவின் முக்கியப் பள்ளிவாசல் அருகே போராட்டம் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், அப்பாடநூல்கள் தங்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தி, சமூகத்தில் தங்களது நிலையை மேம்படுத்த உதவும் என்று திருநங்கைகள் நம்புகின்றனர்.
"எங்களது கதைகள் மக்களின் கவனத்தை ஈர்த்து, நாங்கள் படும் துன்பத்தைப் புரிந்துகொள்ள உதவினால், எங்களுக்கு நல்லதுதான்," என்று திருநங்கைகள் சமூகத் தலைவர் ஜோனக் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
பங்ளாதேஷில் ஏறக்குறைய 10,000 திருநங்கைகள் இருப்பதாக அதிகாரபூர்வத் தகவல் குறிப்பிடுகிறது, ஆனால், 170 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட அந்நாட்டில் 1.5 மில்லியன் திருநங்கையரேனும் இருப்பர் என்று மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.


