பங்ளாதேஷ் விமான விபத்து: மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

1 mins read
12de2a98-083e-4caa-b978-1895b222efa2
கல்லூரி வளாகத்தில் விழுந்து நொறுங்கிய பங்ளாதேஷ் விமானப் படை பயிற்சி விமானம். - படம்: ராய்ட்டர்ஸ்

டாக்கா: பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள கல்லூரி வளாகம் ஒன்றில் அந்நாட்டின் விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் திங்கட்கிழமை (ஜூலை 21) விழுந்து நொறுங்கியது. இதில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக பங்ளாதேஷ் அதிகாரிகள் கூறினர்.

குறைந்தது 27 பேர் மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பங்ளாதேஷ் நேரப்படி பிற்பகல் 1.06 மணிக்கு அந்த எஃப் 7 ரக விமானம், விமானப் படை முகாமிலிருந்து புறப்பட்டுச் சென்றதாகவும் சில நிமிடங்கள் கழித்து அது விழுந்து நொறுங்கியதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இயந்திரக் கோளாறு காரணமாக விமான விபத்து ஏற்பட்டதாக பங்ளாதேஷ் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது.

விபத்தின் காரணமாக 88 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பங்ளாதேஷ் சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி சயீதூர் ரஹமான் தெரிவித்தார்.

விபத்தில் மாண்டோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒருநாள் துக்க அனுசரிப்பைப் பங்ளாதேஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது. பங்ளாதேஷில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான விமானத்தைச் சீனாவிடமிருந்து பங்ளாதேஷ் வாங்கியது.

குறிப்புச் சொற்கள்