தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பங்ளாதேஷ் நாடாளுமன்றம் கலைப்பு

2 mins read
5da24e41-2a75-4639-a3b4-a8e8fade05e4
போக்குவரத்துக் காவலர்கள் பணிக்கு வராததை அடுத்து, தலைநகர் டாக்காவிலும் போகுரா மாவட்டத்திலும் மாணவர்களே போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணிகளில் இறங்கினர். - படம்: ஏஎஃப்பி

டாக்கா: பங்ளாதேஷ் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) அந்நாட்டு அதிபர் அறிவித்தார்.

இதனையடுத்து, அங்கு இடைக்கால அரசாங்கம் அமைய வழி ஏற்பட்டுள்ளது.

அரசாங்க வேலைகளில் இடஒதுக்கீட்டை எதிர்த்து பங்ளாதேஷில் மாணவர்கள் தலைமையில் பெரும்போராட்டம் வெடித்தது. அதனால் ஏற்பட்ட வன்முறைகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், திங்கட்கிழமையன்று பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா பதவியிலிருந்து விலகினார். அத்துடன், அவர் தம் நாட்டிலிருந்து தப்பி இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார்.

ஆயினும், செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படவில்லை எனில் போராட்டம் தொடரும் என்று மாணவர் அமைப்பினர் எச்சரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து, தற்காப்புப் படைகளின் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மாணவர் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து ஆலோசித்தனர். அதன்முடிவில் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அதிபர் முகம்மது சகாபுதீனின் அறிக்கை தெரிவித்தது.

இதனையடுத்து, 76 வயதாகும் ஹசினாவின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவிற்கு வந்தது. கடந்த 30 ஆண்டுகளில் 20 ஆண்டுகாலம் அவர் பிரதமராகப் பதவி வகித்துள்ளார்.

தலைமை ஆலோசகராக டாக்டர் முகம்மது யூனுஸ்

இதனிடையே, இடைக்கால அரசாங்கத்தின் தலைமை ஆலோசகராகச் செயல்பட, நோபெல் பரிசு பெற்ற பேராசிரியர் முகம்மது யூனுஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக பங்ளாதேஷ் ஊடகமான ‘தி டெய்லிஸ்டார்’ தெரிவித்துள்ளது.

“மாணவர்கள் சார்பில் என்னை முதலில் அணுகியபோது நான் ஒப்புக்கொள்ளவில்லை. நான் செய்ய வேண்டிய வேலையே அதிகமாக உள்ளது என்றேன். ஆயினும், மாணவர்கள் விடாமல் என்னிடம் கோரியதால் நான் உடன்பட வேண்டியதாயிற்று,” என்று திரு யூனுஸ் கூறியதாக, நம்பகமான வட்டாரத்தைச் சுட்டி, அவ்வூடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

“அண்மைய போராட்டங்களில் மாணவர்கள், எளிய மக்கள் எனப் பலர் மாண்டுவிட்டனர். இப்போது, நாட்டை முறையான வழியில் நிர்வகிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது,” என்றும் திரு யூனுஸ் கூறினார்.

முன்னாள் பிரதமர் விடுவிப்பு

இதற்கிடையே, ஷேக் ஹசினாவின் முதன்மை எதிரியும் முன்னாள் பிரதமருமான பேகம் கலிதா ஜியா வீட்டுக்காவலிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அதிபர் அறிக்கை தெரிவித்துள்ளது.

பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவரும் இருமுறை பிரதமராக இருந்தவருமான 78 வயது ஜியா, ஊழல் வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் வீட்டுக்காவலில் இருந்து வந்தார்.

குறிப்புச் சொற்கள்