உணவு, தேவையான பொருள்களின் விலையை நிலைப்படுத்த பங்ளாதேஷ் பிரதமர் உறுதி

ஊழலைத் தகர்த்தெறிவதாகச் சூளுரை

உணவு, தேவையான பொருள்களின் விலையை நிலைப்படுத்த பங்ளாதேஷ் பிரதமர் உறுதி

2 mins read
befa952e-691e-454f-938b-46fa3c204491
வருவாயைப் பெருக்குவதற்குப் புனித ரமலான் மாதம் காலமன்று என்று பங்ளாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

டாக்கா: முஸ்லிம்களுக்குப் புனிதமான ரமலான் மாதத்தில் பங்ளாதேஷின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான், விலைகளை நிலைப்படுத்த உறுதி கூறியுள்ளார். 

அத்துடன், சட்டத்தை மீண்டும் நிலைநாட்டப்போவதாகவும் பொருளியல், உள்கட்டமைப்புச் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவிருப்பதாகவும்  அவர் கூறினார். 

நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி பலமான வெற்றியைப் பெற்றதை அடுத்து, பிரதமர் தாரிக் இந்த வாக்குறுதிகளைக் கூறி வருகிறார். 

முன்னாள்ப் பிரதமர் கலிதா ஜியாவுக்கும் கொல்லப்பட்ட அதிபர் ஸியாவுர் ரஹ்மானுக்கும் மகனான 60 வயது திரு தாரிக் திகழ்கிறார். 

அரசியல் நிலைத்தன்மையை உறுதிசெய்வது, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவது, ஆடை உற்பத்தித் துறைக்கு மறுமலர்ச்சியை  ஏற்படுத்துவது போன்ற முக்கியப் பொறுப்புகள் அவருக்குக் காத்திருக்கின்றன.

2024ல் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதை அடுத்து திரு தாரிக்  வழிநடத்தும் புதிய நிர்வாகம், பல்வேறு அம்சங்களைச் சரிசெய்யவுள்ளது.

கருப்புச் சந்தையில் பொருளை விற்று வருவாயைப் பெருக்கிக்கொள்ள வேண்டாம் என திரு தாரிக் , ரமலானின் தொடக்கத்தை முன்னிட்டு புதன்கிழமை ஆற்றிய தொலைக்காட்சி உரையில் கூறினார்.

அரிசி, எண்ணெய், சர்க்கரை, பருப்பு போன்ற உணவு வகைகள் ஆகியவற்றின் விலைகள், தேவை கூடுவதால் ரமலான் மாதத்தில் அதிகரிப்பது வழக்கம்.

சுய தூய்மைக்கான மாதமாக ரமலான் திகழ்கிறது. இது பொதுமக்களின் வேதனையை அதிகரிப்பதற்கான நேரமன்று. அனைவர்க்கும் தேவைப்படும் பொருள்கள் தொடர்ந்து கட்டுப்படியாகும் விலையில் இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டும், என்று அவர் கூறினார். 

பணவீக்கம் அதிகமாக உள்ள நிலையில் அவரது கருத்துகள் வெளிவந்துள்ளன. வருடாந்தர பணவீக்கம் 8.58 விழுக்காடாக உள்ளன. மே 2025லிருந்து மிக அதிகமான பணவீக்க விகிதமாக இது உள்ளது.

வாடிக்கையாளர்களை ஏமாற்றும் சட்டவிரோத வர்த்தக நடைமுறைகளைத் தகர்த்தி ஊழலுக்கு எதிரான கடுமையான சட்டங்களைக் கொண்டுவருவதற்குத் தலையாய முக்கியத்துவம் தரப்படும் என்றும் திரு தாரிக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்