தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பங்ளாதேஷுக்கு மேலும் $1.3 பில்லியன் உதவி: ஐஎம்எஃப் அடுத்த மாதம் வழங்கும்

1 mins read
eae44ea7-0ddb-4387-b77e-5a053c7b6c6c
அனைத்துலகப் பண நிதியம் ஏற்கெனவே $2.3 பில்லியன் நிதியை பங்ளாதேஷுக்கு வழங்கியது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

டாக்கா: அனைத்துலகப் பண நிதியம் (ஐஎம்எஃப்) பங்ளாதேஷுக்கு $1.3 பில்லியன் வழங்கி உதவ முன்வந்து உள்ளது.

பங்ளாதேஷின் $4.7 பில்லியன் கடன் திட்டம் தொடர்பில் நடத்தப்பட்ட நான்காவது மறுஆய்வுக்குப் பிறகு, $1.3 பில்லியனை வழங்க நிதியம் முடிவெடுத்ததாக பங்ளாதேஷ் நிதி அமைச்சு புதன்கிழமை (மே 14) கூறியது.

நாணயப் பரிவர்த்தனை விகிதச் சீர்திருத்தம் அந்த மறுஆய்வுப் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் வகித்ததாக அது தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

ஏப்ரல் மாதம் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அதே மாதம் டாக்காவில் நான்காவது மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

பங்ளதேஷுக்கு இதற்கு முன்னர் $2.3 பில்லியனை அனைத்துலகப் பண நிதியம் கடனுதவியாக வழங்கியது. மூன்று தவணைகளாக அந்தத் தொகை வழங்கப்பட்டது.

தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ள $1.3 பில்லியன் கடனை அடுத்த மாதம் பங்ளாதேஷ் அரசாங்கத்திடம் வழங்க நிதியம் முடிவு செய்துள்ளது.

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததைத் தொடர்ந்து உலகளவில் பொருள்களின் விலைகள் ஏறின. அதனால் எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றை இறக்குமதி செய்ய பங்ளாதேஷ் அரசாங்கத்திற்கு அதிகம் செலவானது.

அரசாங்க நிதிக் கையிருப்பு அழுத்தத்திற்கு ஆளானதால் கடந்த 2023ஆம் ஆண்டு அனைத்துலகப் பண நிதியத்தின் உதவியை பங்ளாதேஷ் நாடியது.

குறிப்புச் சொற்கள்