டாக்கா: தங்களின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவையும் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாடுஸாமன் கான் கமாலையும் இந்தியாவிலிருந்து நாடுகடத்த பங்ளாதேஷ், இன்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல்துறையின் உதவியை நாடத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முகம்மது யூனுஸ் தலைமையிலான பங்ளாதேஷின் தற்காலிக அரசாங்கம், ஹசினாவையும் கமாலையும் தங்களிடம் அனுப்பி வைக்குமாறு திங்கட்கிழமை (நவம்பர் 17) இந்திய அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது. சென்ற ஆண்டு பங்ளாதேஷில் மாணவர்கள் நடத்திய வன்முறை கலந்த ஆர்ப்பாட்டங்களில் வகித்த பங்கிற்காக இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு பங்ளாதேஷ் கேட்டுக்கொண்டது.
பங்ளாதேஷ் அனைத்துலகக் குற்றத் தீர்ப்பாயத்தின் தலைமை அரசாங்க வழக்கறிஞர் அலுவலகம் இருவரையும் நாடுகடத்துவதற்கான விண்ணப்பத்தைத் தயார்செய்து வருகிறது என்று அந்நாட்டில் செயல்படும் தி டெய்லி ஸ்டார் ஊடகம் தெரிவித்தது. பங்ளாதேஷ் வெளியுறவு அமைச்சு, வரும் நாள்களில் விண்ணப்பக் கடிதத்தைப் புதுடெல்லிக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த செய்தி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

