டாக்கா: பங்ளாதேஷில் தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட இடைவெளியால் தட்டம்மை பரவி உலகிலேயே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் தட்டம்மைப் பாதிப்பை முற்றிலும் ஒழிக்கும் நிலைக்குச் சென்ற அந்நாடு, தற்போது வரலாற்றிலேயே இல்லாத மிக மோசமான தட்டம்மைப் பரவலை எதிர்கொண்டுள்ளது.
மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம் நிரம்பி வழிவதுடன், மருந்துப் பற்றாக்குறை, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் மார்ச் மாதம் முதல் இதுவரை 999 தட்டம்மை தொடர்பான சந்தேகத்திற்குரிய, உறுதிசெய்யப்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாடு தழுவிய அவசரகாலத் தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்ட போதிலும், இந்தத் தட்டம்மைப் பரவல் நீண்டகாலமாகத் தொடர்கிறது.
2024, 2025 ஆண்டுகளில், அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்பால், வழக்கமான தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு, தடுப்பு மைய இணையத் தளத்தின் பட்டியலின்படி, பங்ளாதேஷ் தற்போது உலகின் மிகப்பெரிய தட்டம்மைப் பரவலில் சிக்கியிருக்கிறது.
அரசியல் குழப்பங்களின் காரணமாகத் தடுப்பூசிகள் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளாலும் தடுப்பூசி போடுவதைத் தவறவிட்டதாலும் குழந்தைகள், குறிப்பாக வழக்கமான தடுப்பூசிகளைப் பெற முடியாத ஒன்பது மாதங்களுக்கும் குறைவான குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது, அனைத்து வயதுக் குழுக்களிடையேயும் நோய் பரவுவதற்கு வழிவகுத்துள்ளதாக சுகாதார அதிகாரிகளும் நிபுணர்களும் கூறினர்.
மார்ச் மாதத்தில் இந்தத் தட்டம்மை பரவத் தொடங்கியது முதல், பங்ளாதேஷில் 1,66,000க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய தட்டம்மைப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில் ஆய்வகப் பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்ட 19,835 பாதிப்புகளும் அடங்கும் என்று சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

