டாக்கா: பங்ளாதேஷில் அந்நாட்டுப் பிரதான எதிர்க்கட்சியின் ஆதரவாளர்கள் ஆளும்கட்சிக்கு எதிராக நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறையாளர்கள் ரயில் ஒன்றுக்குச் செவ்வாய்க்கிழமை தீ வைத்தனர். இந்தத் தீச்சம்பவத்தில் குறைந்தது நால்வர் பலியாகினர்.
அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் அந்நாட்டின் தேசிய தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி பங்ளாதேஷில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. அந்த வன்முறை சம்பவத்தில் 10க்கும் மேற்பட்ட பேருந்துகளும் வாகனங்களும் தீக்கு இறையாகின. குறைந்தது அறுவர் பலியாகினர்.
போராட்டக்காரர்கள் விரைவு ரயிலின் மூன்று பெட்டிகளுக்குத் தீ வைத்தனர் என்றும் தீக்கிரையான ஒரு பெட்டியிலிருந்து இதுவரை நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் அந்நாட்டுத் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.
தீ வைக்கப்பட்ட ரயிலில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவில்லை எனவும் அந்த ரயில் நெட்ரோகோனாவிலிருந்து டாக்கா நோக்கி சென்று கொண்டிருந்தது எனவும் அந்நாட்டுக் காவல்துறை கூறியது.
இது குறித்து பங்ளாதேஷ் அரசாங்கம் உடனடியாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

