டாக்கா: பங்ளாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவைக் கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்த பங்ளாதேஷ் மாணவர்கள், ஓர் அரசியல் கட்சியை இந்த வாரம் தொடங்க உள்ளதாக தகவலறிந்த இரண்டு வட்டாரங்கள் தெரிவித்தன.
பாகுபாட்டிற்கு எதிரான மாணவர்கள் (The Students Against Discrimination (SAD) எனும் குழு, பொதுத்துறை வேலை ஒதுக்கீட்டிற்கு எதிரான இயக்கமாகத் தொடங்கிய போராட்டங்களுக்கு தலைமை தாங்கியது.
பின்னர் அது விரைவில் ஒரு பரந்த, நாடு தழுவிய எழுச்சியாக உருவெடுத்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் அமைதியின்மை உச்சத்தை எட்டியதால், ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அனேகமாக, புதன்கிழமை நடைபெறும் நிகழ்வின்போது புதிய கட்சியைத் தொடங்குவதற்கான திட்டங்களை மாணவர் குழு இறுதி செய்து வருவதாக ஊடகங்களுடன் பேச அதிகாரம் இல்லாததால் பெயர் வெளியிட விரும்பாத வட்டாரங்கள் தெரிவித்தன.
ஹசீனா வெளியேறிய பிறகு பங்ளாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் மாணவர் தலைவரும் ஆலோசகருமான நஹித் இஸ்லாம், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக கட்சியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆகஸ்ட் 2024 முதல் பங்ளாதேஷ் இடைக்கால அரசாங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் நோபெல் பரிசு பெற்ற முகம்மது யூனுசின் அரசாங்கத்திற்குள் மாணவர் நலன்களுக்காக வாதிடுவதில் இஸ்லாம் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார்.
புதிய அரசியல் கட்சியை வழிநடத்துவதில் கவனம் செலுத்துவதற்காக, அவர் தனது தற்போதைய பொறுப்பிலிருந்து பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது.