டாக்கா: பங்ளாதேஷின் தற்போதைய அரசாங்கம் உள்நாட்டுப் போருக்கு மக்களை இட்டுச் செல்வதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் நெருங்கிய உதவியாளர் மொஹிபுல் ஹசான் சௌத்ரி எச்சரித்திருக்கிறார்.
பதவியிலிருந்து அகற்றப்பட்ட ஹசினாவிற்கு எதிரான தீர்ப்பு முன்பே எழுதப்பட்டுவிட்டது என்றும் அவரைத் தற்காத்துக்கொள்ள நியாயமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் திரு சௌத்ரி சொன்னார்.
ஹசினாவுக்கு எதிரான வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றார் அவர். ஹசினாவுக்கும் அவாமி லீக் கட்சிக்கும் பங்ளாதேஷில் மக்களின் ஆதரவு இருப்பதாக அவர் கூறினார்.
இடைக்காலப் பிரதமர் முகம்மது யூனிசின் அரசாங்கம், நாட்டில் மேடை நாடகத்தை அரங்கேற்றுவதாக அவாமி லீக் கட்சி சாடியது.
போராட்டம் தொடரும் என்று முன்னாள் அமைச்சருமான திரு சௌத்ரி தெரிவித்தார்.
பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவுடனும் ஜெய்ஷ்-இ-முகம்மதுவுடனும் இடைக்கால அரசாங்கத்திற்குத் தொடர்பிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

