ஜோகூர் பாரு: ஜோகூரில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 212 ஆசிரியர்கள், மேம்பட்ட கற்பித்தல் பயிற்சியைப் பெற சிங்கப்பூரில் உள்ள தேசிய கல்விக் கழகத்திற்கு (NIE) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ஜோகூர் மாநில அரசாங்கம் உருவாக்கி உள்ள பங்சா ஜோகூர் முன்னோடிப் பள்ளித் திட்டம், இந்த பிப்ரவரி மாதம் நடப்புக்கு வர உள்ளது.
அந்தத் திட்டத்தில் இடம்பெறும் பள்ளிகளில் பாடங்களைக் கற்றுத் தருவதற்கான பயிற்சிகளிலும் பயிலரங்குகளில் பங்கேற்கும் பொருட்டு அந்த ஆசிரியர்கள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக ‘த ஸ்டார்’ இணையச் செய்தி தெரிவித்து உள்ளது.
சிங்கப்பூரில் பயிற்சி பெற ஆசிரியர்கள் கட்டம் கட்டமாக சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் அடுத்த கட்டமாக பிப்ரவரி 10ஆம் தேதி ஆசிரியர்க் குழு ஒன்று அனுப்பப்படும் என்றும் ஜோகூர் கல்வி மற்றும் தகவல் குழுவின் தலைவர் அஸ்னான் தமின் தெரிவித்து உள்ளார்.
“அனைத்து 212 ஆசிரியர்களும் CEFR ஐரோப்பிய முறை கற்பித்தலுக்கான சான்றிதழைப் பெற வேண்டும் என்பது விருப்பம். பங்சா ஜோகூர் பள்ளி முன்னோடித் திட்டத்தில் அவர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.
“அந்தத் திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பாடங்களின் (STEM) மீது சிறப்புக் கவனம் செலுத்தும்,” என்றார் அவர்.
அந்த உயர்தரக் கல்வித் திட்டத்திற்காக நான்கு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது.
அத்திட்டத்திற்காக ‘ஜோகூர் 2025 வரவுசெலவுத் திட்டத்தில்’ 6.2 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

