பெட்டாலிங் ஜெயா: காப்புறுதித் திட்டங்களின் சந்தா தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துமாறு பேங்க் நெகாரா மலேசியாவிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சந்தா தொகை அதிகரிப்பு காரணமாகப் பலரால் அவற்றைச் செலுத்த முடியாத நிலை ஏற்படக்கூடும் என்றும் அதன் விளைவாகக் காப்புறுதித் திட்டம் செல்லுபடியாகாமல் போய்விடும் என்றும் கூட்டரசு மலேசியப் பயனீட்டாளர் சங்கம் கூறியது.
குறிப்பாக, நடுத்தர மற்றும் குறைந்த வருமானப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இது பொருந்தும் என்று சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சரவணன் தம்பிராஜா தெரிவித்தார்.
சந்தா தொகை அதிகரிப்பைச் சமாளிக்க முடியாமல் வேறு வழியின்றி அதைப் பாதி வழியிலேயே நிறுத்தும் நிலை அவர்களுக்கு ஏற்படக்கூடும் என்றார் அவர்.
இதனால் அத்தியாவசிய மருத்துவக் காப்புறுதி அவர்களுக்கு இல்லாமல் போகக்கூடும் என்று டாக்டர் சரவணன் கவலை தெரிவித்தார்.
“இதற்கு முன்பு, சந்தா தொகை அதிகரிக்கப்பட்டபோது பலர் அதைச் செலுத்த முடியாமல் அவர்களது காப்புறுதித் திட்டம் செல்லுபடியாகாமல் போனதைக் கண்டோம். சந்தா தொகை பேரளவில் உயர்த்தப்பட்டது குறித்து பலர் புகார் அளித்திருந்தனர்.
“இதுதொடர்பாகப் பல பரிந்துரைகளை பேங்க் நெகாரா மலேசியாவிடம் முன்வைத்துள்ளோம். சந்தா தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். சந்தா தொகையை அதிகரிக்கும் கட்டாயம் ஏற்பட்டால் அது நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம்,” என்றார் டாக்டர் சரவணன்.
மலேசியாவில் சுகாதாரக் காப்புறுதித் திட்டங்களின் சந்தா தொகை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் டாக்டர் சரவணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
காப்புறுதி நிறுவனங்களிடையே கூடுதல் போட்டித்தன்மை இருக்க வேண்டும் என்றும் அதன் விளைவாக சந்தா தொகை கட்டுப்படியான விலையில் இருந்து பயனீட்டாளர்கள் பலனடைவர் என்றும் அவர் கூறினார்.