தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கமலா ஹாரிசுக்கு ஒபாமா ஆதரவு

2 mins read
7ef110b4-565a-4680-8bd9-9ceb12266389
அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குவதற்குத் தமக்குத் தொலைபேசி வாயிலாக ஆதரவு தெரிவித்த முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிற்கும் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவிற்கும் திருவாட்டி கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்துக்கொண்டார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் திருவாட்டி கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஒபாமா தம்பதி, துணை அதிபர் கமலாவுடன் தொலைபேசியில் உரையாடுவதைக் காட்டும் காணொளி வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு நிமிடம் நீடிக்கும் அந்தக் காணொளியில் திரு ஒபாமா, “நானும் மிஷெலும் உங்களை அதிபர் வேட்பாளராக ஆதரிப்பதையும் இந்தத் தேர்தலில் நீங்கள் வெற்றிபெறவும் அதிபராகப் பொறுப்பேற்கவும் எங்களால் ஆன அனைத்தையும் செய்வோம் என்பதையும் தெரிவிக்கவே தொலைபேசியில் அழைத்தோம்,” என்று திருவாட்டி கமலா ஹாரிசிடம் கூறுகிறார்.

திருமதி மிஷெல் ஒபாமா, “உங்களை நினைத்துப் பெருமையடைகிறேன். இது வரலாற்று நிகழ்வாக அமையப்போகிறது,” என்று திருவாட்டி கமலா ஹாரிசிடம் கூறினார்.

தொலைபேசியில் பேசும்போது சிலமுறை புன்னகை சிந்திய கமலா ஹாரிஸ் ஒபாமா தம்பதியின் ஆதரவுக்கும் அவர்களின் நீண்டகால நட்புக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

அக்காணொளி பொய்யாகத் தயாரிக்கப்பட்டதன்று என அதிபர் தேர்தல் பிரசாரக் குழு கூறியது.

குடியரசுக் கட்சி வேட்பாளரான முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் திருவாட்டி கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்கு ஆதரவு பெருகிவருகிறது.

அதிபர் ஜோ பைடன் தேர்தல் களத்திலிருந்து விலகியபின், திருவாட்டி கமலா ஹாரிசைக் களமிறக்கும் திடீர் முடிவுக்கு ஆதரவாளர்கள், நன்கொடையாளர்கள், அரசியல்வாதிகள் எனப் பல தரப்பினரும் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

முதல் கறுப்பின அதிபரான முன்னாள் அதிபர் ஒபாமா, தமது தவணைக்காலம் முடிந்துப் பத்தாண்டுகள் கடந்த பிறகும் ஜனநாயகக் கட்சியின் மிகப் புகழ்பெற்ற தலைவர்களில் ஒருவராக விளங்குகிறார்.

திரு பைடனின் நிதித் திரட்டு நிகழ்ச்சிகளுக்கும் அவர் ஆதரவு தெரிவித்திருந்தார். அவை மிகப் பெரிய பலனளித்தன.

துணை அதிபருக்குத் தற்போது அவர் ஆதரவு தெரிவித்திருப்பது, திருவாட்டி ஹாரிசின் பிரசாரக் குழு நிதி திரட்டவும் உதவும் என்று கருதப்படுகிறது.

திருவாட்டி ஹாரிஸ் அதிகாரபூர்வமாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு திரு ஒபாமா அவரை ஆதரித்துப் பிரசாரம் செய்யக்கூடும் என்பதை இது காட்டுவதாகவும் நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்