ஈப்போ: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் முடி திருத்துபவரான 36 வயது எம். செல்வராஜ் நூறாண்டு பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கிறார்.
பாரம்பரிய இந்திய முடி திருத்தகத்தை அவர் நடத்தி வருகிறார்.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜின் கொள்ளுத் தாத்தா இந்தத் தொழிலைத் தொடங்கினார்.
“இந்தியாவிலிருந்து வந்த எனது கொள்ளுத் தாத்தா, கிந்தா ஆற்றுக்கு அருகில் இருந்த பெரிய மரத்தின் அடியில் முடி திருத்தும் தொழிலைத் தொடங்கினார். அதன் பிறகு தற்போதுள்ள இடத்துக்கு இடமாறினார்.
“அவரைத் தொடர்ந்து எனது தாத்தா இத்தொழிலைச் செய்தார். பிறகு தூரத்து சொந்தக்காரர் ஒருவர் கடையை நடத்தினார். கடந்த 12 ஆண்டுகளாக நான் இக்கடையை நடத்தி வருகிறேன்,” என்று செல்வராஜ் கூறினார்.
16 வயதில் முடி திருத்தும் தொழிலைக் கற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
இத்தொழிலை விரும்பி செய்வதாக செல்வராஜ் கூறினார்.
வாடிக்கையாளர்களின் ஆதரவு இருப்பதால் தமது முடி திருத்தகத்தைத் தொடர்ந்து நடத்த முடிவதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தமது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், குறிப்பாக வழக்கமாக வருபவர்களுக்கு அவர் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
“கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது கடையை நடத்த மிகவும் சிரமப்பட்டேன். குறிப்பாக, நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டபோது மிகவும் சவால்மிக்கதாக இருந்தது.
“ஒவ்வொரு நாளும் வீடு வீடாகச் சென்று நான்கிலிருந்து ஐந்து வாடிக்கையாளர்களின் முடியைத் திருத்தி பணம் சம்பாதித்தேன். அண்மையில் எனக்கு விபத்து ஏற்பட்டது. கடைக்குச் சென்று முடி திருத்த முடியாத நிலை ஏற்பட்டது. வாடிக்கையாளர்கள் சிலர் என் வீட்டிற்கே வந்து என்னை நலம் விசாரித்தனர். சிலர் முடி வெட்டிக்கொள்வதற்காக என் வீட்டிற்கு வந்தனர்,” என்றார் செல்வராஜ்.
தமது வாடிக்கையாளர்கள் பல இன, பல வயதுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்று செல்வராஜ் கூறினார்.
தமது சேவையின் தரம் குறித்து கூகலில் பதிவேற்றம் செய்யப்படும் தகவல்களைப் பார்த்துவிட்டு நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தும் வாடிக்கையாளர்கள் வந்ததாகவும் அவர் கூறினார்.
முடி திருத்தும் சேவைகளுக்கு செல்வராஜ் 10 ரிங்கிட் ($3.11) மட்டுமே வசூலிக்கிறார்.
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குத் தள்ளுபடி விலையில் முடி திருத்துவதாகவும் வசதி குறைந்த வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக முடி திருத்துவதாகவும் செல்வராஜ் தெரிவித்தார்.

