சாபா தேர்தலில் வென்ற ‘பாரிசான் நே‌ஷனல்’ தலைவர் உயிரிழப்பு

1 mins read
3d9c80dc-e971-4068-8c73-c9de7014f16f
சாபா மாநிலத்துக்கான ஐக்கிய முன்னணியின் தலைவர் புங் மொக்தா ராடின். - படம்: பெர்னாமா

கோத்தா கினபாலு: மலேசியாவின் சாபா மாநிலத்துக்கான ஐக்கிய முன்னணித் (பாரிசான் நே‌ஷனல்) தலைவரும் கினாபாத்துங்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான புங் மொக்தா ராடின் காலமானார்.

கடந்த வாரம் நடந்த சாபா மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு வயது 66. திரு புங் மொக்தாரின் மகன் நாயிம் குர்னியாவான் மொக்தார் அவரின் மறைவைப் பற்றி சமூக ஊடகத்தில் அறிவித்தார்.

மோசமான நுரையீரல் பிரச்சினைக்கு ஆளானதால் திரு புங் மொக்தார் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மேலும் மோசமடைந்து அவர் சிறுநீரக பாதிப்புக்கும் ஆளானார்.

அதனைத் தொடர்ந்து திரு புங் மொக்தார் உயிரிழந்தார் என அவரின் குடும்பத்தார் தெரிவித்தனர். சாபா தேர்தலில் தாம் பொறுப்பு வகித்த லமாக் பகுதியைத் தக்கவைத்துக்கொண்ட ஆறே நாள்களில் திரு புங் மொக்தார் உயிரிந்தார்.

கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு நுரையீரல் அழற்சி ஏற்பட்டதால் திரு புங் மொக்தார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரின் உதவியாளர்கள் தெரிவித்தனர். சில நாள்கள் கழித்து மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு ஓய்வில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோதும் அவர் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

குறிப்புச் சொற்கள்