தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொய் முடியையும் கண்ணிமைகளையும் ஏற்றுமதி செய்யும் வடகொரியா

2 mins read
9a2048c5-a8f6-4474-8d4d-9efa5f34da5e
பொய் முடியும், கண்ணிமைகளும் சீனாவுக்கான வடகொரியாவின் ஏற்றுமதிகளில் பெரும்பங்கு வகிக்கின்றன. - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: சீனாவுக்கான வடகொரியாவின் ஏற்றுமதிகளில் பொய்முடியும் கண்ணிமைகளும் பெரும்பங்கு வகிக்கின்றன.

வடகொரியாவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது, சீனா.

சென்ற ஆண்டு சீனாவுக்கான வடகொரியாவின் வருடாந்திர ஏற்றுமதிகளின் மதிப்பு 292 மில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. பொய் முடி, பொய்க் கண்ணிமைகள் அதில் கிட்டத்தட்ட 60 விழுக்காடு என்று சீனாவின் சுங்கத்துறை பொது நிர்வாகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

பியோங்யாங் கொவிட்-19 எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சீனாவுடன் மீண்டும் வர்த்தகத்தைத் தொடங்கிய நிலையில், இந்த அழகுப் பொருள்களின் ஏற்றுமதி மதிப்பு 2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 2023ஆம் ஆண்டில் 13 மடங்குக்கும் மேல் அதிகரித்து 163 மில்லியன் அமெரிக்க டாலரானது.

கொவிட்-19 கிருமிப்பரவலுக்கு முந்திய காலகட்டமான 2019ஆம் ஆண்டின் மதிப்பைக் காட்டிலும் அது இரண்டு மடங்கு அதிகம்.

வடகொரியா பத்தாண்டுகளுக்கும் மேல் தயாரித்துவரும் இந்தப் பொருள்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் தேவை, அவை ஐக்கிய நாடுகள் நிறுவனம் தடை விதிக்காத அரிய பொருள்களில் உள்ளடங்குவதே காரணம் என்று வடகிழக்காசியாவுக்கான நிகாட்டா பல்கலைக்கழகத்தின் பொருளியல், சமூக ஆய்வுக் கல்விக் கழகத்தின் பேராசிரியர் மிமுரா மிட்சுஹிரோ கூறினார்.

துணிகளின் ஏற்றுமதிக்குப் பதிலாக வடகொரியா பொய் முடியையும் கண்ணிமைகளையும் ஏற்றுமதிசெய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.

“2016ஆம் ஆண்டுவரை வடகொரியாவிடமிருந்து சீனாவுக்கு அதிக அளவில் துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இருப்பினும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தடைகளின் கீழ், வடகொரியாவால் துணிகளை ஏற்றுமதி செய்யமுடியவில்லை. அதனால் வடகொரியாவில் துணிகளைத் தயாரித்த ஊழியர்கள் தங்கள் வேலைகளை இழந்தனர்,” என்றார் பேராசிரியர் மிமுரா.

குறிப்புச் சொற்கள்