வெளிநாட்டினரிடம் பணம் வாங்கப்பட்டதை உறுதிப்படுத்திய பாத்தாம் குடிநுழைவு அலுவலகம்

வெளிநாட்டினரிடம் பணம் வாங்கப்பட்டதை உறுதிப்படுத்திய பாத்தாம் குடிநுழைவு அலுவலகம்

2 mins read
e805185d-6291-4ed0-b6e0-a3b6e46f4c6e
மார்ச் மாதம் பாத்தாம் சென்ற இரண்டு வெவ்வேறு சுற்றுப்பயணிகளிடமிருந்து இடைத்தரகரும் அதிகாரியும் பணம் வாங்கியது விசாரணையில் புலப்பட்டது. - படம்: ஃபட்லி

பாத்தாம்: இந்தோனீசியாவின் ரியாவ் தீவுகளின் குடிநுழைவுத் தலைமையகம், பாத்தாம் சென்டர் படகு முனையத்தில் வெளிநாட்டினரிடமிருந்து பணம் பறிக்கும் நடவடிக்கைகள் நடந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

மார்ச் 13, 14ஆம் தேதிகளில் பாத்தாம் சென்ற இரண்டு வெவ்வேறு சுற்றுப்பயணிகள், தங்களிடமிருந்து பணம் பறிக்கப்பட்டது குறித்து சொன்னதை மார்ச் 25ஆம் தேதி சிங்கப்பூர் மதர்‌ஷிப்.எஸ்ஜி தளம் பதிவிட்டது.

அதைக் குறிப்பிட்டுப் பேசிய வட்டார அலுவலகத் தலைவர் உஜோ சுஜோட்டோ, தளத்தில் பதிவிடப்பட்ட கட்டுரையில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டோர் ஏசி (AC), நேய் (NAY) என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டதால் விசாரணையை முழுமையாக நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாகக் கூறினார்.

பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டோர் பற்றிய தகவல்களைத் தரும்படி மதர்‌ஷிப் தளத்திடம் நேரடியாகக் கேட்டதாகச் சொன்ன திரு உஜோ, இன்னும் எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை என்றார்.

நாடு திரும்பவிருந்த நேய்யும் அவரது பெற்றோரும் பயணச்சீட்டுகள் இல்லாததால் படகு முனையச் சோதனையின்போது சிக்கலை எதிர்நோக்கினர்.

“சிங்கப்பூருக்குத் திரும்பும் வெளிநாட்டினரிடம் பயணச்சீட்டுகள் இருப்பது அவசியம். சம்பவம் நடந்தபோது பிற வெளிநாட்டினரிடம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் நேய்யும் அவரது பெற்றோரும் கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் கண்காணிப்பு அறையில் காத்திருக்க நேர்ந்தது,” என்றார் திரு உஜோ.

அப்போது இடைத்தரகர் ஒருவர் அறைக்குள் நுழைந்ததைக் கண்காணிப்புக் கேமராவில் காணமுடிந்தது. தொடக்கக் கட்ட விசாரணையில் அந்த இடைத்தரகர் நேய்யை அணுகி குறிப்பிட்ட ஒரு கட்டணத்துக்கு அவருக்கு உதவப்போவதாகக் கூறினார்.

அதுதொடர்பில் ஜேஎஸ் என்ற இணைக் கண்காணிப்பாளரான குடிநுழைவு அதிகாரியுடன் அந்த இடைத்தரகர் பேரம்பேசியுள்ளார்.

ஒரு நபருக்கு $100 என்ற கட்டணத்தில் பிரச்சினையை முடித்துத் தருவதாக இடைத்தரகர் கூறி மூவருக்குமாகக் கிட்டத்தட்ட $250யை வாங்கி $150யை அதிகாரியிடம் கொடுத்தார்.

இடைத்தரகரிடமும் அதிகாரியிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன் அதிகாரியும் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்