கரடிப் புகார்களால் ஜப்பானிய உள்ளாட்சிப் பணிகள் பாதிப்பு

கரடிப் புகார்களால் ஜப்பானிய உள்ளாட்சிப் பணிகள் பாதிப்பு

1 mins read
7f85e4ec-c04c-4477-ac7c-761c4c4c5aeb
2026 ஜூன் 9ஆம் தேதியன்று, தோச்சுகி மாநிலம், உத்சுனோமியா பகுதியில் தென்பட்ட கரடியைப் பிடிக்கும் முயற்சியில் காவல்துறை அதிகாரிகள். - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

தோக்கியோ: கரடிகள் தொடர்பான புகார்களால் தங்களது அன்றாடப் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக 40 விழுக்காட்டிற்கும் அதிகமான ஜப்பானிய உள்ளாட்சி அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஜப்பான் அரசாங்கம் நடத்திய ஆய்வில் பங்கேற்ற 40 மாநில, நகராட்சி நிர்வாக அமைப்புகளில் 17 அமைப்புகள் கரடிப் புகார்களைக் கையாளுவதால் தங்களது பணிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளன.

அவற்றில் பத்து உள்ளாட்சி அமைப்புகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தொலைபேசி அழைப்புகளைக் கையாள வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டன. ஐந்து உள்ளாட்சிகள், இணையத்தளத்தின் மூலமும் மின்னஞ்சல் வழியாகவும் ஏராளமான புகார்களை எதிர்கொண்டன.

‘கரடிகளைக் கொல்ல வேண்டாம்’ என்பன போன்ற ஆவேசமான கருத்துகளும் ஒருவரே மீண்டும் மீண்டும் தொலைபேசியில் அழைத்து ‘ஆளுநரைப் பேசச் சொல்லவும்’ என்று வற்புறுத்திய சம்பவங்களும் நடந்துள்ளன. பிடிபட்ட கரடியை விடுவித்த பிறகு, “ஏன் அதைக் கொல்லவில்லை?” என்று கேள்விகள் எழுப்பப்பட்ட நிகழ்வும் பதிவாகியுள்ளது.

வனக்கரடிகளைப் பாதுகாக்கக் கோரிய ஒருவர், கரடி விவகாரங்களைக் கையாண்ட ஊழியரை அவருடைய அனுமதியின்றிப் படமெடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டு ஜூலை முதல் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளை வெளியிட்ட உள்நாட்டு விவகார, தகவல் தொடர்பு அமைச்சு, களப்பணியாளர்களின் சுமையைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்