கரடி இறைச்சிக்கு அமோக வரவேற்பு

கரடி இறைச்சிக்கு அமோக வரவேற்பு

1 mins read
f11d2510-e228-4c59-878b-a4a0248aef99
ஒவ்வொரு வாரமும் 10 முதல் 15 பாக்கெட்டுகள் இறைச்சி விற்பனையாகின்றன. படம்: ஃபேஸ்புக் -

வடஜப்பானுக்குச் செல்வோர், அங்குள்ள 'வென்டிங் மெஷின்' இயந்திரத்தில் கரடி இறைச்சியை வாங்கலாம்.

ஜப்பானின் அகிதா மாநிலம், செமோக்கு நகரில் இருக்கும் ஓர் உள்ளூர் கடைக்கு அருகில் 2022 நவம்பரில் இந்த இயந்திரம் நிறுவப்பட்டது.

மலைப் பிரதேசங்களில் உள்ளூர் வேட்டையாடல் குழுவினரால் வேட்டையாடப்படும் கரடிகள், இறைச்சிக்கூடத்தில் பதப்படுத்தப்படுகின்றன.

மெலிந்த, சதைப்பற்றுள்ள கரடி இறைச்சி, 250 கிராமுக்கு 2,200 யென் (S$22) என்று விலைபோகிறது.

இந்த 'வென்டிங் மெஷின்' 24 மணி நேரமும் செயல்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜப்பானின் அதிவேக ரயில்களில் பயணம் செய்வோர் கரடி இறைச்சியை வாங்கிச் செல்கின்றனர். இந்த இயந்திரத்தின் மூலம் ஒவ்வொரு வாரமும் 10 முதல் 15 பாக்கெட்டுகள் இறைச்சி விற்பனையாவதாகக் கூறப்படுகிறது.

"கரடி இறைச்சி சுத்தமாக இருக்கிறது. குளிர்காலத்திலும் அது கடினமாக இருப்பதில்லை. பல்வேறு உணவு வகைகளில் சேர்த்து அதை ருசித்து உண்ணலாம்," என்று உணவகப் பிரதிநிதி ஒருவர் கூறினார்.

ஜப்பான் தலைநகர் தோக்கியோவைச் சுற்றியுள்ள கான்டோ பகுதியைச் சேர்ந்தோர், அஞ்சல் வாயிலாக கரடி இறைச்சியை வாங்குவது குறித்து விசாரித்து வருவதாக உள்ளூர் ஊடகத் தகவல் குறிப்பிடுகிறது.