பாண்டுங், மேற்கு ஜாவா: இந்தோனீசியாவில் இருந்து குறிப்பாக அழகாகப் பிறந்த குழந்தைகளை சிங்கப்பூருக்கு கடத்திய கும்பல் பற்றிய விவரங்களை அங்குள்ள காவல்துறை அதிகாரி வெளியிட்டுள்ளார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு புதன்கிழமை (ஜனவரி 14) வழங்கிய சிறப்பு நேர்காணலில் மேற்கு ஜாவா மாநில மூத்த காவல்துறை அதிகாரியும் குற்றவியல் பிரிவின் இயக்குநருமான அடெ சபாரி திடுக்கிடும் தகவல்களைப் பகிர்ந்தார்.
“அழகாக உள்ள குழந்தைகளை சிங்கப்பூருக்கும், மற்ற குழந்தைகளை ‘உள்ளூர் சந்தைக்கும்’ கடத்தல் கும்பல் தேர்வுசெய்துள்ளது,” என்று அவர் கூறினார்.
இந்தோனீசியாவில் போலியாகத் தயாரிக்கப்பட்ட கடப்பிதழ், குடும்ப அட்டை, பிறப்புச் சான்றிதழ் போன்ற ஆவணங்களைக் கொண்டு, பெற்றோர் வேடம்பூண்டு, கடத்தல்காரர்கள் நேரடியாகச் சாங்கி விமான நிலையத்தை அடைந்து இதுவரை 15 புதிதாகப் பிறந்த குழந்தைகளைக் கைமாற்றியுள்ளனர்.
கடத்தல்காரர்கள் மேற்கு ஜாவாவில் ஏழ்மையில் உள்ள பெற்றோரைத் தேர்வுசெய்து, அவர்களிடம் S$1,700 (20 மில்லியன் ரூப்பியா) வரை கொடுத்து குழந்தைகளைப் பெறுவதாக அறியப்படுகிறது.
இந்தோனீசியச் சட்டப்படி, இலவசமாக குழந்தைகள் தத்தெடுக்கப்படவேண்டும். அதையும் மீறி, கடத்தல்காரர்கள் பணக்கார சிங்கப்பூர் வளர்ப்புப் பெற்றோரிடம் $20,000 வரை வசூலிக்கின்றனர்.
இந்தோனீசிய, சிங்கப்பூர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து கடத்தல் குற்றங்களை விசாரித்து வருகின்றனர். கடத்தல் கும்பல்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக சிங்கப்பூர் உறுதியளித்துள்ளது.
மேற்குக் கலிமந்தானின் பொந்தியானாக் பகுதியே கடத்தல் கும்பலின் இருப்பிடம் என்று திரு அடெ குறிப்பிட்டார். ஜனவரி 9ஆம் தேதி சிங்கப்பூர், இந்தோனீசிய அரசாங்கங்கள் தத்தெடுப்புக்காக குழந்தைகள் கடத்தப்படுவதை மறுஆய்வு செய்யவுள்ளதாக அறிவித்திருந்தன. பாதிக்கப்பட்ட வளர்ப்புப் பெற்றோரிடம் தொடர்பில் உள்ளதாக சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த 2025ஆம் ஆண்டு மேற்கு ஜாவாவில் பலர் சிங்கப்பூருக்கு குழந்தைகள் கடத்திய சந்தேகத்தில் கைதான பிறகு இந்தப் பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்தது. அவர்களின் குற்ற விசாரணை இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கவுள்ளது.
கடந்த புதன்கிழமை (ஜனவரி 14) சமுதாய குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் கோ பெய் மிங், குழந்தைத் தத்தெடுப்பு சேவை நிறுவனங்கள் முறையாக வெளிநாட்டுக் குழந்தைகளின் பூர்வீகங்களை கண்டறிய வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாதோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

