பங்ளாதேஷின் முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா பேகம் 80 வயதில் காலமானார்

2 mins read
781c12bc-f226-46f7-9dfb-8e2a0c4b1403
பங்ளாதேஷின் முதல் பெண் பிரதமர் திருவாட்டி கலிதா ஜியா பேகம். - படம்: ராய்ட்டர்ஸ்

டாக்கா: பங்ளாதேஷின் முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா பேகம் தமது 80வது வயதில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) சிங்கப்பூர் நேரப்படி காலை 8 மணிக்குக் காலமானார்.

அவர், 1991ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரையிலும், பிறகு மீண்டும் 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரையிலும் இரண்டு முறை பங்ளாதேஷின் பிரதமராகப் பதவி வகித்தவர்.

“பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சியின் (BNP) தலைவரும், முன்னாள் பிரதமரும், தேசியத் தலைவருமான கலிதா ஜியா பேகம் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்குக் காலமானார். அவரது ஆன்மா அமைதியடையப் பிரார்த்தனை செய்ய அனைவரையும் அழைக்கிறோம்,” என்று அவரது கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவரின் இறுதிச் சடங்கு புதன்கிழமை (டிசம்பர் 31) நடைபெறும் என்றும் அவரது மறைவிற்கு தேசிய அளவில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் பங்ளாதேஷின் தற்காலிக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நெடுங்காலமாகச் சிறையில் இருந்ததால் உடல்நலம் குன்றிய திருவாட்டி ஜியா, கடந்த நவம்பர் மாதம் பங்ளாதேஷில் அவரது அரசியல் எதிரியான ஷேக் ஹசினாவின் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்தபிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.

அவரது தேசியவாதக் கட்சி தேர்தலில் வெற்றிபெறும் என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஆயினும், உடல்நலம் பெரிதும் பாதிப்படைந்ததால் பல சிகிச்சைகளை அவர் மேற்கொண்டுவந்தார்.

ஊழல் குற்றச்சாட்டுகளால் அவர் 2018ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசினாவின் அரசாங்கம் திருவாட்டி ஜியா வெளிநாடுகளில் சிகிச்சை பெறுவதற்குத் தடை விதித்திருந்தது.

ஷேக் ஹசினாவின் அரசாங்கம் கடந்த ஆண்டு கவிழ்ந்ததும் திருவாட்டி ஜியா விடுவிக்கப்பட்டார்.

கடந்து 17ஆண்டுகளாக லண்டனில் நாடுகடந்து வாழ்ந்துவந்த திருவாட்டி கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான், டிசம்பர் 25ஆம் தேதி பங்ளாதேஷ் திரும்பினார். அவருக்குக் கட்சியினர் மிகப் பெரிய வரவேற்பு அளித்தனர்.

வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி நடக்கும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அவர் கட்சியை வழிநடத்தி, வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்