பிரஸ்ஸல்ஸ்: ஐக்கிய நாட்டுப் பொதுச்சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.
“ஐக்கிய நாட்டுக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை பெல்ஜியம் ஒரு நாடாக அடையாளப்படுத்தப்படும். அத்துடன் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு எதிராகக் கடுமையான தடைகள் விதிக்கப்படும்,” என்று பெல்ஜிய வெளியுறவு அமைச்சர் மெக்ஸிம் பிரிவோட் செப்டம்பர் 2ஆம் தேதி அறிவித்தார்.
ஜூலை மாதத்தில் அதே ஐக்கிய நாட்டுப் பொதுச்சபைக் கூட்டத்தில் பாஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கப்போவதாகப் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரோன் அறிவித்தார். நியூயார்க்கில் அந்தக் கூட்டம் இம்மாதம் 9ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது.
பாலஸ்தீனத்தை நாடாகக் கருதும்படி பிற மேற்கத்திய நாடுகளும் அழைப்பு விடுத்துள்ளன.
காஸாவில் அதிகரிக்கும் மனிதநேய நெருக்கடியை அடிப்படையாகக் கொண்டு அந்தத் தீர்மானம் எடுக்கப்படுவதாகத் திரு பிரிவோட் கூறினார்.
இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனர்களில் அதிகமானோரை ஒரு முறைக்கு மேல் வீடுகளை விட்டு வெளியேறும் சூழலுக்குத் தள்ளியிருப்பதாலும் ஐக்கிய நாட்டு நிறுவனம் அங்குப் பஞ்சத்தை அறிவித்திருப்பதாலும் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக திரு பிரிவோட் குறிப்பிட்டார்.
அனைத்துலக சட்டத்தை மீறும் விதத்தில் இஸ்ரேல் வன்முறையாக நடந்துகொண்டதால் இஸ்ரேலிய அரசாங்கம், ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆகியோர்மீதான நெருக்கடியை அதிகரிக்க பெல்ஜியம் உறுதியான தீர்மானத்தை எடுக்கவேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இஸ்ரேலிய மக்களைத் தண்டிப்பதற்காக அல்ல, மாறாக அதன் அரசாங்கம் அனைத்துலக, மனிதநேய சட்டங்களை மதித்து நடப்பதை உறுதிசெய்து காஸாவின் நிலையை மாற்றும் நோக்கில் பெல்ஜியம் அத்தகைய தீர்மானங்களை எடுத்துள்ளதாகக் கூறியது.