வாஷிங்டன்: ‘யேல்’ பல்கலைக்கழக மருத்துவப்பள்ளி, அதன் மாணவர்சேர்க்கை முறையில் பாகுபாட்டைக் கடைப்பிடித்ததாக அமெரிக்க நீதித் துறை வியாழக்கிழமை (மே 14) குற்றஞ்சாட்டியுள்ளது.
கடந்த எட்டு நாள்களில் மாணவர்சேர்க்கைக் குறைபாடுகள் குறித்து அதிபர் டிரம்ப்பின் அரசாங்கம் அடையாளம் காட்டியுள்ள இரண்டாவது கல்வி நிலையமாக யேல் பல்கலைக்கழகம் அமைகிறது.
அக்குற்றச்சாட்டின்படி, கறுப்பினத்தவருக்கும் ஸ்பானிய மொழி பேசுவோருக்கும் சட்டத்துக்குப் புறம்பாக அதிகச் சலுகைகள் வழங்கப்பட்டு, வெள்ளையர்களுக்கும் ஆசிய மாணவர்களுக்கும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாக நீதித் துறை தெரிவித்தது.
யேல் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், மாணவர்சேர்க்கை விதிமுறைகள் கடுமையானதாக அமைக்கப்பட்டுள்ளதால் அதன்மீது தனக்கு நம்பிக்கை உள்ளது என்று அது விளக்கமளித்தது.
ஹார்வர்ட், ஸ்டான்ஃபர்ட், டேவிட் கெஃபன், கலிஃபோர்னியா, ஓஹாயோ மாநிலப் பல்கலைக்கழகங்கள் போன்ற பல கல்வி நிலையங்களில் இயங்கும் மருத்துவப் பள்ளிகளில் மாணவர்சேர்க்கை முறை குறித்து அமெரிக்க நீதித்துறை அண்மையில் சந்தேகம் எழுப்பியது.
இவ்வாண்டு பிப்ரவரி மாதம், மாணவர்சேர்க்கை நடைமுறைகளை வெளியிடும்படி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கு எதிராக நீதித் துறை சட்ட நடவடிக்கை எடுத்தது.
இனம் சார்ந்த மாணவர்சேர்க்கை நடைமுறைகளை 2023ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது. அப்படியிருந்தும் யேல் பல்கலைக்கழகம் அதைப் பின்பற்றுவதாகப் பொது உரிமைகளுக்கான துணைத் தலைமைச் சட்ட அதிகாரி ஹர்மீட் டிலன் கூறினார்.

