2023ல் $847,000 வருமானம் ஈட்டிய பைடன் தம்பதியர்

1 mins read
b677cc6e-9c96-4dc9-85c8-b013c72c7a9e
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவருடைய துணைவியார் ஜில் பைடனும். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: கடந்த 2023ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவருடைய துணைவியார் ஜில் பைடன் இருவரும் சேர்ந்து 619,976 அமெரிக்க டாலர் (S$847,000) வருமானம் ஈட்டினர்.

தங்களது வருமானத்தில் 23.7 விழுக்காட்டை அவர்கள் வரியாகச் செலுத்தினர்.

இவ்விவரத்தை அதிபர் பைடன் திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 15) வெளியிட்டார்.

ஜனநாயகக் கட்சி சார்பில் இவ்வாண்டு மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளார் திரு பைடன்.

இதனிடையே, அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்துக் களம் காணவுள்ள முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப், உள்நாட்டு வருவாய்த் துறை தணிக்கை செய்து வருவதால் தனது வருமான விவரத்தை வெளியிட இயலாது என்று தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த திரு டிரம்ப், சென்ற ஆண்டில் தான் ஈட்டிய வருமானம் குறித்த விவரத்தை வெளியிடத் தடையில்லை என்று உள்நாட்டு வருவாய்த் துறை கூறிவிட்டபோதும் அவர் அவ்விவரத்தை வெளியிடவில்லை.

அதிபர் பைடனும் அவர்தம் துணைவியாரும் தங்களது வருமானத்தில் ஐந்தில் நான்கு பங்கைத் தங்களது வேலைமூலம் ஈட்டினர்.

அதிபர் பைடன் 400,000 அமெரிக்க டாலரைச் சம்பளமாகப் பெற்றார். வடக்கு வெர்ஜீனியா சமூகக் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றியதன் மூலம் திருவாட்டி பைடன் 85,985 அமெரிக்க டாலரை ஊதியமாகப் பெற்றார்.

குறிப்புச் சொற்கள்